’மோடி- மோடி’ என்று கோஷம் எழுப்பும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என்று கர்நாட்க அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன பேசினார் கர்நாடகா அமைச்சர்..?
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டம் காரடகியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசினார். அப்போது பேசிய அவர், “ மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக உறுதியளித்தது. அந்த வகையில் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதை எதையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள், மாணவர்கள் மோடிக்கு ஆரவாரம் செய்து வருகின்றனர். ’மோடி- மோடி’ என்று கோஷம் எழுப்பும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கன்னத்தில் அறைய வேண்டும்.
இந்த இளைஞர்கள் மத்திய அரசிடமும், மோடியிடனும் கேள்வி கேட்க வேண்டும். மாணவர்கள் வேலை கேட்டால் பக்கோடா விற்கச் சொல்கிறார்கள். அதேபோல், வளர்ச்சிக் கனவை நனவாக்க தவறிய பாஜகவினரும் மக்களிடம் வாக்குகளைக் கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 10 வருடங்களாக எல்லாவற்றையும் பொய்யின் அடிப்படையில்தான் நடத்துகிறார்கள். அதனால் இன்னும் 5 ஆண்டுகள் ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அது இப்போது எங்கே? அதில் ஒன்றையாவது இங்கு சொல்லுங்கள். பிரதமர் மோடி புத்திசாலி, அவர் நன்றாக ஆடை அணிவார், அவர் புத்திசாலித்தனமான பேச்சுகளை வழங்கி ஏமாற்றுகிறார். பின்னர் பிரதமரின் ஒரு ஸ்டண்ட்- கடலின் ஆழத்திற்கு சென்று அங்கு பூஜை செய்வது..? ஒரு நாட்டின் பிரதமர் செய்ய வேண்டிய வேலை இதுதானா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக எதிர்க்கட்சியான பாஜக மனு அளித்துள்ளது. கர்நாடகாவின் எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான ஆர்.அசோக், தேர்தல் ஆணையத்தில் சிவராஜ் மீது புகார் அளித்து கூறியதாவது, “இது தேர்தல் நடத்தை விதிகளின் தெளிவான மீறல். அமைச்சர் சிவராஜ் தங்கடகி தேர்தல் பணியில் இருந்தும், காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதிலிருந்தும் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பாஜக தலைவரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி சமூக ஊடகங்களில், “மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மோசமாகத் தோற்கப் போகிறது. இதை காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே இந்த மக்கள் இப்படி மோசமான செயலை செய்கின்றனர். இவர்களும் பிரதமர் மோடியை சர்வாதிகாரி என்கிறார்கள்.” என்றார்.