தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அபிநயாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள வாரியார் திடல் அருகே வேனில் பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது பேசிய சீமான், “முதன் முதலில் தமிழன் பேசிய மொழி தமிழ் என ஆய்வு சொல்கிறது. தமிழர்கள் என்ற உணர்வை இழந்ததால், உரிமைகள், உடைமைகளை இழந்து நிற்கிறோம். நில் பகைவர் சூழ தமிழ் தத்தளித்து கொண்டிருக்கிறது. அரசியல் வலிமை இருந்ததால் தான், அதிகார வலிமை பெறமுடியும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நம் கண் முன்னே இயற்கை வளங்கள், அண்டை மாநிலங்களுக்கு கொள்ளையடிக்கப்படுகிறது. ஒரு அடிப்படை புரிதல் இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துள்ளோம். இந்த மாற்றத்திற்கான அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம். நாங்கள் நீண்ட காலமாக தேர்தலில் தனியாக போட்டியிடுகிறோம். ஆணுக்கு, பெண் சமம் என்று சொல்கிறார். ஆனால் நாங்கள் ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்கிறோம். சமூக நீதி பேசுகிறார்கள். இதே தருமபுரியில் மு.க.ஸ்டாலின் பேசும் போது, சமூக நீதி பேசும் ராமதாஸ், பாஜகவோடு கூட்டணி வைக்கும் போது தெரியவில்லையா?.
அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. பெரியார் பூமி என்று சொல்கிறார்கள். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எந்தெந்த சமூகம், எவ்வளவு இருக்கு என்று சொல்வதற்கு திமுக ஏன் தயங்குகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு கொடுங்கள். ஆனால் மத்திய அரசு தான் அதை நடந்த வேண்டும் என மாநில அரசு சொல்கிறது. ஆனால் பிகார் அரசு இதை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் கொடுக்க மறுக்கிறது கர்நாடக, அந்த காங்கிரஸ் ஆட்சி அமைய உழைத்தவர் மு.க.ஸ்டாலின். இன்று நம்மை தேடி வாக்கு சேகரிக்க வரும் காங்கிரஸ் கட்சியினரின் நிலைப்பாடு என்ன? பாஜக நதிநீர் பிரச்சினை தீர்க்கவில்லை. இப்போது கச்சத்தீவை பற்றி பேசுகிறது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, இதைப்பற்றி பேசவில்லை. இப்போது தேர்தல் வருவதால், பாஜக கச்சத்தீவு பற்றி பேசுகிறது. சிலிண்டர் விலையை குறைக்கிறார்கள். ஆசிரியர்கள் போராடியபோது கண்டு கொள்ளாத முதலமைச்சர், இப்பொழுது தேர்தல் வருவதால், ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொல்கிறார் ஸ்டாலின். தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என அச்சமடைந்து, அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதிகளை 6 சட்டமன்ற தொகுதியாக இருப்பதை மாற்றி, 3 தொகுதிகளை ஒரு நாடாளுமன்ற தேர்தலை உருவாக்கினால், அதிக தொகுதிகள் இருக்கும். அப்போ புது பெண்களுக்கு தனி தொகுதியாக ஒதுக்க வேண்டும். எல்லா தொகுதிகளுக்கும் ஆண்கள் நிறுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதுபோன்று நிற்பதை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அங்கு இடைத் தேர்தல் நடத்தாமல், கடந்த தேர்தலில் இரண்டாம் இடம் வந்தவரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும். இல்லையென்றால், அந்த இடத்தில் இடைத்தேர்தல் நடத்த செலவாகும் பணத்தை, நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற, அந்த சட்டமன்ற உறுப்பினரிடம் வசூல் செய்ய வேண்டும். இந்த சின்னம்தான் வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது” எனத் சீமான் தெரிவித்தார்.