கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, புறநகர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் திமுக சின்னத்தில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை வெற்றி பெற செய்ய வேண்டுமென வாக்குகள் சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்பி ராஜா, “திமுக கோவையில் அட்டகாசமான வெற்றியை பெறும். திமுகவுக்கு எதிராக போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் கோவையில் பெறும். பொதுமக்கள் திமுகவின் பக்கம் தான் உள்ளனர்.


மூன்று டிகிரி வெப்பம் அதிகமாகியுள்ளது என்ற அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிஆர்பி ராஜா, இன்னும் அடுப்பு பற்ற வைக்கவில்லை எனத் தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை விமர்சனம் குறித்த கேள்விக்கு, ”பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அது குறித்த கேள்விகளை மட்டும் கேட்கவும். பாஜக போன்ற சில்லறை கட்சிகள் குறித்து கேட்க வேண்டாம். அவர்களை பற்றி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதிமுகவை வெல்லவே திட்டம் அமைத்து கோவையில் வெற்றி பெறுவோம் திமுகவை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும்.


களத்தில் திமுக, அதிமுக மட்டுமே


உதயநிதி செங்கலை வைத்து அரசியல் பண்ணுகிறார் ஸ்கிரிப்டை மாற்ற வேண்டும் என்று பேசியிருந்தது குறித்த கேள்விக்கு, ”திமுகவை திசை திருப்புவதற்காகவே இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. களத்தில் திமுக, அதிமுக மட்டுமே உள்ளது. பொதுமக்களை சந்தித்து சென்று கொண்டிருக்கும் எங்களிடம் மற்றவர்கள் பற்றி கேள்வி கேட்டால், அது எங்களுக்கு கவனச் சிதறல் மட்டுமே. எனவே பாஜக போன்ற சில்லறை கட்சிகளை ஓரங்கட்டி விட்டு களத்தில் உண்மையான எதிரியிடம் போட்டியிட்டு கோவையில் மகத்தான வெற்றி பெறுவோம்” என்றார்.


பின்னர் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசும் போது, ”கோவையில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெறுவோம். கோவையில் உள்ள முக்கிய பிரச்சனைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். கோவையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை சந்திக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்