வாக்கு சேகரிப்பில் புதிய யுத்திகள் 


பொதுவாக சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர வேண்டும் என பல்வேறு யுத்திகளை கையாளுவது சமீப காலமாக வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவும் குறிப்பாக இவர்களின் புதிய யுத்திகள் பல்வேறு ஊடகங்கள் மூலம் வைரல் ஆவதால் அது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து, வழக்கத்திற்கு மாறான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டீ கடையில் டீ போடுவது, வடை, போண்டா, பஜ்ஜி, பரோட்டா போடுவது, காய்கறி விற்பனை செய்வது, துணி துவைத்து தருவது என புது புது விதமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற ஒரு நிகழ்வு தற்போது மயிலாடுதுறை தொகுதியில் பாமக வேட்பாளர் மூலம் நடைபெற்றது வருகிறது.




நாடாளுமன்ற தேர்தல் 


இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜுன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.




பாமக வேட்பாளர் 


மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாமக ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதனை தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.




இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மூன்றாவது நாள் பிரச்சாரமாக செம்பனார்கோயில் ஒன்றிய பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். செம்பனார்கோயில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொறையாறு கடை வீதி காய்கறி சந்தையில் காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 




காய்கறி கடையில் வியாபாரம் செய்த வேட்பாளர் 


அப்போது காய்கறி கடை ஒன்றில் உள்ளே சென்று பெண்களுக்கு காய்கறிகள் எடுத்து விற்பனை செய்து, நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான் என்று கூறி காய்கறிகளை விற்பனை செய்தது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதே போன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ம.க.ஸ்டாலின் டீ கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் வந்துவிட்டால் வேட்பாளர்கள் என்ன குரளி வித்தை யெல்லாம் பண்றாங்கபாரேன் என்றும், இது இவர்களின் போலித்தனத்தை வெளிப்படுத்துவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.