நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க இப்போது முதலே அறிவிப்புகள், பிரச்சாரங்கள் என தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். 


தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை ஏற்கனவே அறிவித்தனர். இந்தநிலையில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்ற அறிவிப்பை இன்று வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


கடந்த தேர்தலின் யூகத்தின்படி, சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்வக்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என்பதை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதி பட்டியலை இன்று வெளியிடலாம். 


தமிழ்நாட்டில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நேற்று மதியம் வீடியோ கால் மூலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்லப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எஞ்சிய 6 தொகுதிகள் எது..? அந்த தொகுதிகளில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. 


இதையடுத்து, நேற்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


காங்கிரஸ் சார்பில் யார் யார் பெயர் ஆலோசிக்கப்பட்டது..?


எஞ்சியுள்ள தொகுதிகளில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களான கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, டாக்டர் செல்லக்குமார், விஷ்ணுபிரசாத், விஸ்வநாதன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், வழக்கறிஞர் சுதா, பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், இந்த முறை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜோதிமணி போட்டியிடுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஜோதிமணிக்கும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மோதல் போக்கு நிலவியதுதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், எம்.பி. ஜோதிமணி வேறு ஏதேனும் தொகுதியில் போட்டியிடுகிறாரா என்பது தெரியவில்லை.


புதுச்சேரியை பொறுத்தவரை மீண்டும் காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கமே போட்டியிடலாம். தற்போதும் இவர் புதுச்சேரி எம்.பியாக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வைத்தியலிங்கம் 56% ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.


காங்கிரஸில் வார் ரூம் அமைப்பு: 


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தலைமையில் தேசிய அளவில் வார் ரூம் அமைத்துள்ளது  அகில இந்திய காங்கிரஸ். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடி காங்கிரஸ் கட்சிக்கான வார் ரூமை அமைத்தார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. நேற்று இரவு 8.30 மணியளவில் வார் ரூம்க்கான நிர்வாகிகளை நியமித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அத்ன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கான வார் ரூப் தலைவராக வசந்த்குமாரும், துணை தலைவர்களாக சுமதி அன்பரசு, பி.வி.சிவக்குமார், கிருத்திகா பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.