மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டி கர்நாடகாவில் பாஜக ஆதரவாளர் ஒருவர் விரலை வெட்டி கடவுளுக்கு ரத்த அபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரசியல் தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இப்படியான நிலையில் வித்தியாசமாக மக்களை கவர அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதேசமயம் தங்கள் கட்சியினர் வெற்றிபெற வேண்டி வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் சோனார்வாடா பகுதியைச் சேர்ந்த அருண் வார்னகர் என்பவர் பிரதமர் மோடியின் விசுவாசியாக இருந்து வருகிறார்.
அவர் மீது கொண்ட அன்பால் தனது வீட்டில் மோடிக்காக கோயில் எல்லாம் கட்டி தினமும் பூஜை செய்து வருகிறார். இதனிடையே வரும் மக்களவை தேர்தலில் பிரமராக மோடி மீண்டும் வெற்றி பெர வேண்டி தனது இடது கை விரலை வெட்டி அதிலிருந்து வந்த இரத்தத்தை கொண்டு காளி தேவிக்கு அருண் வார்னகர் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். மேலும் தனது வீட்டிலிருக்கும் மோடி கோயில் சுவற்றில், மோடி பிரதமராக வேண்டும், பாஜக 378 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என ரத்தத்தில் எழுதியுள்ளார்.
இந்தி திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய அருண் வார்னகர் கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலிலும் இதேபோல் கை விரலை வெட்டி ரத்த அபிஷேகம் செய்திருந்தார். அவரது வேண்டுதல்படி பிரதமர் மோடி வெற்றி பெற்றார். பாஜக ஆட்சியும் அமைந்ததால் மீண்டும் அதேபோல் வேண்டிக் கொண்டதாக அருண் வார்னகர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: JP Nadda: தமிழ்நாட்டுக்கு வந்த ஜே.பி.நட்டா... ஒரே நாளில் 4 தொகுதிகளில் பரப்புரை