என்னை தேர்ந்தெடுத்தால் ராமநாதபுரம் தொகுதியை மாலத்தீவு போல கடல் சார் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். பிற மாவட்ட மக்கள் இங்கு வேலை தேடி வரும் நிலையை உருவாக்குவேன் என ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் ஆலோசனை கோட்டத்தில் ஓபிஎஸ் தேர்தல் வாக்குறுதியளித்தார்.

 

ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பாக, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையில் ராமநாதபுரத்தில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

 

இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓபிஎஸ் பேசுகையில், “ராமநாதபுரம் தொகுதி 120 கிலோமீட்டர் கடலோர பகுதிகளை கொண்ட தொகுதி. இந்த தொகுதியை மாலத்தீவை போல சுற்றுலா தலமாக மாற்றி அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய அளவுக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பேன், கடல் சார்ந்த சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பேன். ராமநாதபுரம் மாவட்டத்தை பொருளாதாரத்தில் சிறந்த மாவட்டமாக மாற்ற, மத்திய அரசின் உதவிகளோடு நடவடிக்கை எடுக்கப்படும். பிழைப்பு தேடி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்வதை தடுத்து நிறுத்தி பிற மாவட்ட மக்கள் ராமநாதபுரத்திற்கு வேலை தேடி வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவேன்.



 

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே தங்கி இருந்து உங்களுக்காக பாடுபடுவேன். 2001 முதல் 2024 வரை தேனி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி இருக்கிறேன். மருத்துவ கல்லூரியிலிருந்து கலை கல்லூரி வரை அனைத்து வகையான கல்லூரிகளை ஏற்படுத்தி, தேனி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

 

அதேபோல, ராமநாதபுரம் தொகுதியை பொருளாதார வளம் மிக்க தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்று வாக்குறுதி அளித்து பேசினார்.