மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மக்களவை தேர்தலில் 4வது கட்ட வாக்குப்பதிவு இன்று 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா வேட்பாளராக மாதவி லதா நிறுத்தப்பட்ட நிலையில், இவருக்கு போட்டியாக ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவரும், தற்போதைய எம்பியுமான அசாதுதீன் ஓவைசியும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முகமது வலியுல்லா சமீர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 


வாக்காளர்களிடம் அத்துமீறிய பாஜக வேட்பாளர் மாதவி லதா: 


இன்று காலை முதல் வாக்குப்பதிவு சீராக நடைபெற்று வந்தநிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் மாதவி லதா, அந்த தொகுதிக்குட்பட்ட அசம்பூரில் உள்ள வாக்குச்சாவடி எண் 122க்கு சென்றுள்ளார். அங்கு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த காத்திருந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் வாக்காள அடையாள அட்டையை காண்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, முஸ்லிம் பெண்களின் முகத்தில் இருந்த பர்தாவை கழற்றுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 






இதைத் தொடர்ந்து மாதவி லதா, போலி வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததாக புகார் கூறியிருந்தார். இதற்கிடையில், பிற்பகலில் பாஜக தொண்டர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டத்தை அறிந்ததும், மாதவி லதா மலக்பேட் காவல் நிலையத்திற்கு வந்து, அங்கு காவல்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 


வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்: 


இதையடுத்து, ஹைதராபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது மாலக்பேட் காவல் நிலையத்தில் எப்.ஆர்.ஐ பதிவு செய்துள்ளனர். மாதவி லதா மீது 405(1), 171சி, 186 ஆகிய பிரிவுகளின் கீழ் தேர்தல் பணியின்போது தனது செல்வாக்கை தவறாக பயன்படுத்துதல், பணியில் இருந்த அரசு அதிகாரிக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 






வாக்காளர்களின் அடையாள அட்டையை சரிபார்க்கும் வீடியோ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாதவி லதா, "நான் ஒரு வேட்பாளர்.  சட்டத்தின்படி எனது பகுதி வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டையைப் பார்க்கவும், முகமூடி அணியாமல் பார்க்கவும் எனக்கு உரிமை உண்டு நான் ஆண் அல்ல, நான் ஒரு பெண். நான் அவரிடம் மிகவும் பணிவாகக் கேட்டுக் கொண்டேன். அடையாள அட்டையுடன் உங்களையும் பார்க்க முடியுமா என்று கேட்டேன். இந்தச் சம்பவத்தை யாராவது பெரிய பிரச்னையாக்க நினைத்தால், அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது” என்றார்.