மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட கூட்டணி விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர்.


மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் நாளை விருப்பமனு பெறப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. மேலும், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். அந்த குழுவில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் , ஆர். தர்மர், புகழேந்தி உள்பட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, நேற்று இரவு 10.15 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.


அ.தி.மு.க.வில் இருந்து முழுவதும் நீக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அரசியலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


இந்த சூழலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பா.ஜ.க. தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே சசிகலா, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோருடன் இணைந்து பயணிப்போம் என்று கூறியிருந்தார்.


நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இதுவரை இடம்பெறவில்லை. அ.தி.மு.க. தே.மு.தி.க.வுடன் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களின் கூட்டணி பங்கீடு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பா.ம.க.வுடனும் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருடன் இதுவரை கூட்டணி வைக்க எந்த தரப்பினரும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அ.தி.மு.க. கட்சியும், சின்னமும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் இந்த மக்களவைத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இந்த மக்களவைத் தேர்தல் முக்கிய பங்கு வகிப்பதால், அவருக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால், அவர் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்? எந்த சின்னத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார்? என்ற பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Congress Candidates List: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ஸ்டார் வேட்பாளர்கள் யார்? யார்?


மேலும் படிக்க: TVK Vijay: தவெக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த தலைவர் விஜய்: உற்சாகத்தில் தொண்டர்கள்