18வது மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெறும் தேதி குறித்தான அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலானது அடுத்த 2 மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள்:
காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், சசி தரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுயிலும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கேரள மாநிலம் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேல், சத்தீஸ்கரின் ராஜ்நந்காகோவன் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கேரள மாநிலம் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பொதுச் செயலாளர் கே.சி,வேணுகோபால் தெரிவித்ததாவது, ”தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க அதிகபட்ச தொகுதிகளை வெல்வதே எங்கள் முன்னுரிமை; காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்ச தொகுதிகளை வெல்வதே இலக்கு என தெரிவித்தார்”.
இந்நிலையில், கடந்த வாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக 195 தொகுதிக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் நரேந்திர வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.