சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது, "சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, பாமக ஆகிய மும்முனை போட்டி நடைபெறுகிறது. அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் காணாமல் போவார்கள். திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு முன்பாகவே சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தேன். இவர் என்னை அடையாளம் காட்டினாராம் என்று கிண்டல் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் என்னைப் பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள். என்ன செய்தேன் என்றும், என்ன செய்யப் போகிறேன் என்றும் சொல்லி வாக்கு கேட்கவில்லை. அவ்வாறு கேட்காதவர்களுக்கு வாக்களித்தும் என்ன பயன் உள்ளது. நானும், திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பேசலாம். மக்கள் நடுவராக இருந்து பதில் அளிக்கட்டும் என்று கூறினேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. திமுக வெற்றி பெற்று வந்தால் திமுக குடும்பம் மட்டுமே வாழும். மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் ஆச்சரியத்தில் இருக்க வேண்டும் என்பது தான் அவரது எண்ணம்.



முதல்வர் தொழில் முதலீட்டை ஈர்க்க புரிந்துணர்வு வெளிநாடு சென்றார். குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் உள்ள தொழிலதிபர்களை அழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவில்லை. தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களை ஸ்பெயின் நாட்டிற்கு அழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார் என்ற சந்தேகம் உள்ளது. திமுக தலைவர் தொழிலில் முதலீடு செய்தாரா? என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரூ.30,000 கோடி சுற்றி வருகிறது. திமுக முன்னாள் நிதியமைச்சர் ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். மீண்டும் அதிமுக ஆட்சி வரும்போது முப்பதாயிரம் கோடிக்கு நிச்சயம் பதில் சொல்லி ஆக வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்டவைகள் அதிகரித்துவிட்டது.


மேகதாது அணை கட்டுவதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. மேகதாதுவில் அணைக்கட்டி விட்டால் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. தற்போது மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமே சரியாக இருக்கும். கர்நாடகா அரசு மாததோறும் தமிழகத்திற்கு பங்கு நீரை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை திமுக பெற்றது. அதைக் கூட நடைமுறைப்படுத்தாத அரசு திமுக அரசு தான். மத்தியில் இருந்து அமைச்சர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு இலக்காவில் உள்ள மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்கள் ஒவ்வொன்றையும் கொண்டு வந்திருந்தால் மக்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். மத்திய அமைச்சர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருகிறார்கள். அவர் திட்டங்களை கொண்டு வந்திருந்தால். தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கும், மத்திய அமைச்சர்கள் யாரும் எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. ஓட்டுக்காக மட்டுமே வருகிறார்கள்.


எந்த மத்திய அமைச்சரும் எந்தத் திட்டங்களையும் கொண்டு வரவில்லை. ஓட்டு வாங்கிவிட்டு மக்களை மறந்து விடுவார்கள். இதனால்தான் அதிமுக, தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. நாட்டு மக்களை மறைக்கின்ற கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக முடிவு செய்துவிட்டது. தமிழகத்தில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த தமிழக மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க வேண்டும் அதுதான் எங்கள் அடிப்படை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்காது என்று மத்திய அரசு அறிவிக்கவில்லை. பாஜக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது மக்களிடம் ஏன் வாக்கு சேகரித்து வருகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.



மேலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையே காவிரி தான். முறையாக தண்ணீர் கிடைத்தால் தான் அரிசி உற்பத்தி செய்யப்படும். இல்லாவிட்டால். டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் நிலை வந்துவிட்டது. மத்தியில் ஆளும் கட்சி தமிழகத்தை பற்றி கவலைப்படவில்லை. மேகதாது விவகாரத்தில் மத்தியில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. கர்நாடகாவில் உள்ள பாஜக, காங்கிரஸ் கட்சியை பற்றி கட்டிய தீருவோம் என்கிறார்கள். அவ்வாறு இருக்கும் போது ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். நம் கண்ணையே, நாமே குத்திக் கொள்ளலாமா என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று பேசினார். மேகதாது அணை கட்டினால் 20 மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் நிலை ஏற்படும். இதனால் தான் தேசிய கட்சிகளை அதிமுக நம்பவில்லை. மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம் என்றும் கூறினார்.


பெட்ரோல், டீசலுக்கு 70 சதவீதம் மத்திய அரசு வரி போட்டு தமிழக மக்களை வஞ்சிக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அதிமுக தலைமையும் வலியுறுத்திவிட்டும் ஆனால் குறைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் கவர்ச்சிகரமான திட்டங்களை பேசி வாக்குகளை வாங்க பார்க்கிறார்கள். மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இன்னும் 24 அமாவாசை மட்டுமே ஸ்டாலின் அவர்களே மக்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றும் பேசினார்.