நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்காக ஒதுக்கியுள்ளது.
மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் விரைவில் பிரச்சாரத்தை தொடங்குகின்றன. அனைத்து கட்சிகளும் சரியான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்று தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய தொடங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி சின்னம் என்ன..?
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து வரும் நாம் தமிழர் கட்சியின் சமீபகாலமாக மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொண்டது. நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்த கரும்பு விவசாய சின்னத்தை, பாரதீய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று அக்கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாமலே மக்களவை தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன..? சீமானின் சின்னம் என்ன..? என்ற கேள்வியுடனும் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில், வருகின்ற மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கிடைத்தாலும் பிரச்சனை இல்லை. நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம். எங்களுடைய கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டார்கள். மாற்றாக விவசாயத்தை முன்வைத்து வேறு ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள்” என்று பேசினார்.
அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டி:
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழருக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர்களுக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி இதுவரை நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல், தனித்தே போட்டியிடுகிறது. மேலும், 40 மக்களவை தொகுதிகள் என்றால் அதில், சரிசமமாக 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் நிற்க வைப்பார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.