கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து சேலம் மாவட்டம் உடையாபட்டியில் அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர் பேசியது, "நேற்று தனது சொந்த மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார். அதற்காக இன்று நான் சேலம் வந்துள்ளேன். திராவிட மாடல் ஆட்சி எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்பதை தத்துவமாக கொண்டுள்ளது. கொரோனா கால நிவாரணமாக 5000 கொடுங்கள் என சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த தலைவர் ஸ்டாலின் கேட்டார். நாங்கள் எல்லாம் கொடு கொடு 5000 கொடு என்று முழக்கமிடோம். அப்போது எடப்பாடி பழனிசாமி வில்லன் பி.எஸ்.வீரப்பா போல சிரித்தார். ஆனால் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் கையெழுத்தாக முதல்வர் ஸ்டாலின் 4000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.



என்ன செய்தார் எடப்பாடி?


இதேபோல், பெண்களுக்கு இலவச பயணம், உரிமை தொகை திட்டம், மற்ற நாடுகளுக்கும் முன்னோடி திட்டமாக உள்ள காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த பட்டுள்ளது. கன்னடா நாட்டில் தமிழகத்தை காலை சிற்றுண்டி திட்டத்தை போல் நாங்களும் காலை சிற்றுண்டி அழிக்கிறோம் என்று அந்த நாட்டின் அதிபர் கூறியுள்ளார். இது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றார். மூன்றாண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. என்ன செய்தார்கள், என்ன நடக்குது என்று கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.


பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவரென்ற பட்டத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கலாம். 4 வருடமாக அவர்களின் எம்எல்ஏக்களை பார்ப்பதற்கே நேரம் போயிற்று. அவர்கள் எங்கே டிடிவி தினகரன் பக்கம் போய் விடுவார்களா? என்று இவர் நம்மை என்ன செய்தார்கள் என்று கேட்டு வருகிறார். மகளிர்க்கு செல்போன், கல்வி கடன் ரத்து, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற தேர்தல் அறிக்கைகள் அதிமுக நிறைவேற்ற வில்லை என்று கூறினார்.



பிரதமரை சௌக்கிதார், சௌகிதார் என்று சொன்னார்களே. சௌகிதார் என்றால் இந்தி மொழியில் காவலர் என்றீர்கள். கருப்பு பணத்தை 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்றார்கள். அவையெல்லாம் என்ன ஆயிற்று? தங்கத்தின் விலை தற்போது 54 ஆயிரம் விற்கப்படுகிறது. 37 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்கிறார்களா? ஜிஎஸ்டி திமுக காங்கிரஸ் காலத்தில் இருந்தது. ஆனால் கலைஞர் கையில் அதை மாற்றுவதற்கான திட்டம் இருந்தது.


மாநிலங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் ஜிஎஸ்டி வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம் என சட்டம் கொண்டுவரப்பட்டது. கலைஞருக்கு பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அவரும் கலைஞரை போல ஜிஎஸ்டி தமிழகத்திற்கு இல்லை என அறிவித்தார். அவர் காலத்தில் ஜிஎஸ்டி இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி காலத்தில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அதனால் தான் விலைவாசி உயர்வு அடைந்துள்ளது.


பாதிப்புகளை பார்க்காத நிதியமைச்சர்:


விலைவாசி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமியும் ஒரு காரணம்தான் என்றார். தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்தார். நானும் நிதியமைச்சரும் உடன் சென்றோம். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கவில்லை. பாதிப்பு அதிகம்தான் என்று சொல்லிவிட்டு சென்றார். நாங்கள் பிரதமரிடம் எடுத்து கூறி நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டு இதுவரை தூத்துக்குடி வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை" என்று பேசினார்.