தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியது, "கடந்த தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் பாமக இரண்டாவது இடமும் பாஜக மூன்றாவது இடமும் பிடித்திருந்தது. தற்போது பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டிருப்பது எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் சிந்தித்து பாருங்கள். அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்பதால் மாநிலங்களவை எம்பி ஆக அன்புமணி ராமதாஸ் ஆனார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாஜகவிற்கு அடிமையாக இருப்பதற்காக பாமக உள்ளிட்ட கட்சிகள் பார்க்கிறது எங்களுக்கு மக்கள்தான் தேவை. பதவி வேண்டும் என்பதற்காக பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மக்கள் நன்மைக்காக கூட்டணி சேரவில்லை; அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பாமக கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது. அவசர அவசரமாக செய்யவில்லை, ஆட்சியில் இருந்தபோது ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜாதி வாரி கணக்கெடுக்க எடுக்க வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது திமுக இதை நீடிக்க வில்லை இதனால் காலாவதி ஆகிவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து நடைமுறைக்கு வந்திருக்கும். மக்களின் குறைகளை நிறைவேற்றியுள்ளோம் இதற்கான அரசாணையை காண்பித்து பேசினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பேசுகிறார். அன்புமணி ராமதாஸ் சொன்னது போன்று அதிமுக வேட்பாளரான அசோகன் என்ற உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். மக்களுக்காக நன்மை செய்கின்ற ஒரே கட்சி அதிமுக கட்சி தான். திமுக தலைவர் என்னைப் பற்றியும், அதிமுக பற்றியும் மட்டும்தான் பேசுவார். செய்வதையும் சொல்வதில்லை, செய்யப் போவதையும் சொல்வதில்லை ஸ்டாலின். என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தேன் என்று பட்டியலிட்டு என்னால் பேச முடியும்; அவ்வாறு திமுகவால் பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் எதற்காக துடிக்கிறார் என்றால் மத்தியிலும், மாநிலத்திலும் பதவியில் இருக்க வேண்டும், மத்தியிலும் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக தான் துடித்து வருகிறார் என்றார்.
மகளிர் உரிமைத்தொகை குறித்து தொடர்ந்து போராடி, பேசியதால் வழங்கினார்கள். மகளிர் உரிமைத் தொகை குறித்து சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்திலும் வலியுறுத்தியதன் காரணமாக 27 மாதங்களும் பிறகுதான் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினார். இதிலும் தகுதி உள்ள மகளிர்களுக்கு மட்டும் தான் வழங்குவோம் என்று வழங்கி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பாக கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ,ஆட்சிக்கு வந்தவுடன் தற்பொழுது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும்தான் வழங்குவோம் என்று வழங்கி வருகிறார். மகளிர் உரிமைத் தொகை குறித்து அதிமுக வலியுறுத்தி அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே திமுக மகளிர் உரிமை தொகையை வழங்கியது. திமுகவிற்கு ஓட்டு போட்டதற்கு கழுத்தில் இருக்கும் நகை எல்லாம் போனதுதான்;திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த பரிசு. நகை கடன் தள்ளுபடி குறித்து சரியான முறையில் திமுக அறிக்கை கொடுத்திருந்தால் மக்கள் ஏமாந்திருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் மேட்டூர் உபரிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேறும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய அரசாங்கம் திமுக அரசு. கொரோனா காலத்தில் சம்பளம் எந்தவித பிடித்தும் இல்லாமல் அனைத்து ஊதியத்தையும் முழுமையாக கொடுத்தது அதிமுக அரசாங்கம். அரசு ஊழியர்கள் என்னென்ன விரும்பினார்களோ தக்கவாறு உதவி செய்தது. அதிமுக ஆட்சி தான். ஒரு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதிமுக ஆட்சியே ஒரு சாட்சி. மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளை விட கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக ஆட்சி மக்களுக்கு வெளிச்சம் தந்த ஆட்சி என்று கூறினார்.