பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என முனைப்பில் உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டும் 40 வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தவைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு உரை ஆற்றினார்கள்.


இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:


உதயநிதி ஸ்டாலின் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும்.


இந்த தேர்தலில் மூன்று பிராதன கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்கள். தேர்தலில் போட்டி என வரும் போது அது அ.தி.மு.க விற்கும், தி.மு.க விற்கும் தான். ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் பிரதமரை பற்றி விமர்சிக்கிறார். அதை பற்றி கவலை இல்லை. மற்றொன்று என்னை பற்றி விமர்சிப்பார். வேறு சரக்கு இருந்தால் தான் அவர் பேச முடியும் எதுவும் இல்லாததால் தமிழ்நாட்டை நாம் கெடுத்து வைத்து விட்டோம் என்கிறார்.


தி.மு.க ஆட்சியில் மூன்றாண்டுகளில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பத்து ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது. அதே போல 6 சட்ட கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலம் என பெயர் எடுக்க வைத்தோம். உதயநிதி ஸ்டாலின் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும், சாலையில் காட்ட கூடாது. கதையை மாற்ற வேண்டும். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை பெற்று எய்ம்ஸ் கட்டியிருக்கலாம் ஆனால் அதை கேட்க தெம்பு, திராணி, துணிவு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள், விவரமானவர்கள் நீங்கள் கூறுவதை கேட்க மாட்டார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதிப்போம். அதை கொண்டு வந்தது தி.மு.க வும் காங்கிரஸ் கட்சி தான்.




மக்களை ஏமாற்றும் கட்சி திமுக..


மக்களை ஏமாற்றும் கட்சி திராவிட மாடல். மேலும், அ.தி.மு.க ஆட்சியில் தான் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கினோம். இது தான் சாதனை. அ.தி.மு.க மக்களுக்கு நன்மை செய்துள்ளது. மெட்ரோ திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டம், முக்கொம்புவில் தடுப்பணை, சாலை வசதிகள், பாலங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.கவை பார்த்து தமிழ்நாட்டை கெடுத்து விட்டோம் என்கிறார். அவருக்கு கண் சரியாக தெரியவில்லை போல.


கர்நாடகா தண்ணீர் தராததால் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர் நிலம் கருகியது. ஆனால் அவர் தண்ணீர் கேட்டு தரவில்லை. ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம் நாட்டு மக்கள் முக்கியமல்ல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி கூட வழங்கவில்லை. விவசாயிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா தி.மு.க ஆட்சியில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து ஒரே மேடையில் விவாதிக்கலாம். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அ.தி.மு.க ஆட்சியில் தான். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என அந்த மாநில துணை முதல்வர் பேசும்போது ஸ்டாலின் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. குடும்பத்தை குறித்து தான் கவலைப்பட்டார்கள். தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த கட்சி தி.மு.க தான்.




தேர்தல் பத்திரம் மூலம் திமுக ஊழல் செய்துள்ளது.


கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு பிரச்சனை வந்தால் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது அ.தி.மு.க தான். 2ஜி ஊழல் மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டு அமைச்சர்களும் ஊழல் காரணமாக நீதிமன்றம் ஏறி இறங்குகிறார்கள். அவர்களுக்கும் சிறைக்கு செல்வார்கள். தி.மு.க வில் அயலக அணி பொறுப்பாளர் போதை பொருள் கடத்தி உள்ளார். கஞ்சாவை கடத்தியது தி.மு.கவினர்தான். அதனால்  டி.ஜி.பி சைலேந்திர பாபு கஞ்சா ஆப்ரேசன் என கூறி கொண்டே ஓய்வு பெறு விட்டார். அவல ஆட்சியை செய்யும் ஸ்டாலின் அ.தி.மு.க ஆட்சி குறித்து குறை கூறுகிறார்.


தேர்தல் பத்திரம் மூலம் அதிக அளவு நன்கொடை பெற்றது தி.மு.க தான். 2026ல் அ.தி.மு.க ஆட்சி அமையும் அப்போது உப்பு திண்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அமைச்சர்கள் என்னென்ன ஊழல் செய்துள்ளார்கள் என்பதை எடுத்து வைத்துள்ளேன். 2026 ல் ஆட்சி அமைந்த உடன் பார்த்து கொள்கிறோம். சிறுபான்மை மக்களுக்கு பிரச்சனை வந்தால் அ.தி.மு.க அதற்கு துணை நிற்கும். நாங்கள் வாக்குகாக கூறவில்லை மனிதாபிமானத்துடன் கூறுகிறோம். உங்களுக்காக துணை நிற்கும். வரும் நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க விற்கு மரண அடி கொடுக்க வேண்டும். தி.மு.க காற்றோடு கரைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.