இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி நமக்கெல்லாம் பதில் கிடைக்கப்போகிறது. இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. 


நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி, ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. 


அதில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. இந்தநிலையில், தேர்தல் நாளுக்கு முன், வாக்காளர்கள் தங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 


வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் பெயர் இருக்கிறதா, எந்த வாக்கு மையத்தில் தங்கள் பெயர் உள்ளது, வரிசை எண் என்ன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தேர்தல் நாள் அன்றே தேடுகின்றனர். இதனால் வாக்கு மையங்களில் உள்ள அதிகாரிகளிடம் வாக்காளர்கள் நிறைய பேர் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது. 


இந்த நிலைமை வராமல் இருக்க வாக்காளர் பட்டியலில் தனது மற்றும் தன் குடும்பத்தினரின் பெயர் உள்ளதா?, அப்படி இல்லை என்றால் மீண்டும் தங்களை பெயரை பட்டியலில் சேர்க்கலாமா? என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், இது போன்ற குழப்பங்கள் நாளை மறுநாள் ஒவ்வொரு வாக்கு மையங்களில் ஏற்படலாம். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் மொபைல் மூலமே, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, வரிசை எண் என்ன? வாக்காளர் அட்டையில் உள்ள எண் என்ன? நாம் எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம். 


எப்படி கண்டறியலாம்..? 



  1. முதலில் நீங்கள் உங்களது மொபைல்போனில் உள்ள பிளே ஸ்டோருக்கு சென்று வோட்டர் ஹெல்ப் லைன் ஆப்-ஐ (Voter Helpline App) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

  2. பதிவிறக்கம் செய்த பின் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளர் அட்டையில் உள்ள எண் (இதை எப்பிக் எண் என்று சொல்வார்கள்) குறிப்பிட்டால் அனைத்து தகவல்களும் வந்துவிடும்.

  3. அதன் கீழ் நீங்கள் எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கப் போகிறீர்கள்.

  4. எந்த பள்ளியில் உங்கள் வாக்குச்சாவடி மையம் உள்ளது உள்ளிட்ட தகவல்கள் காண்பிக்கும். 


முன்னதாக, இதுகுறித்து பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “ Voter Helpline App செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கலாம். தற்போது ஒவ்வொரு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. அது ஒரு அடையாளத்திற்கு மட்டுமே உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த பூத் சிலிப்பை வைத்து உங்களால் வாக்கு செலுத்த முடியாது. 


உங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 12 அடையாள அட்டை அல்லது ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து மட்டுமே வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியும்” என்று தெரிவித்தார். 


எந்தெந்த அடையாள அட்டைகளை காண்பித்து வாக்கு அளிக்கலாம்..? 



  • ஆதார் அட்டை (aadhar card)

  • 100 நாள் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டை (MNREGA வேலை அட்டை)

  • வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள்

  • தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

  • ஓட்டுனர் உரிமம் (driving license)

  • பான் கார்டு (PAN card)

  • NPR-ன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு

  • இந்திய பாஸ்போர்ட்

  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

  • மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்

  • எம்பிக்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்

  • தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UDID) அட்டை

  • இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அடையாள அட்டை