"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி... மக்கள் மனதில் நிற்பவர் யார்" இந்த வாக்கியத்திற்கு மிக சரியாக பொருந்த கூடியவர் தான் சின்ன கலைவாணர் விவேக். தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பினும் நகைச்சுவையின் மூலம் சமூக விழிப்புணர்வை நகைச்சுவையாக பரப்பியவர். சிரிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் சிந்திக்கவும் வைத்தவர். நகைச்சுவையாளராக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நெகிழவைத்தவர்.

  


விவேக் உடல்நலக்குறைவால் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி காலமானார். அவரின் மறைவு இன்றளவும் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.  


 



ஒரு சிறந்த நடிகன் என்பதை காட்டிலும் ஒரு தலைசிறந்த மனிதராக தமிழக மக்களின் மனங்களை வென்றவர். அந்த மாமனிதனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. அவரின் மறைவுடன் தமிழ் சினிமா தரமான நகைச்சுவையை இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த தினத்ததன்று நடிகர் விவேக் தன்னுடைய நகைச்சுவை மூலம் வலுவான சமூக செய்தியை பகிர்ந்த சில படங்களை பற்றி பார்க்கலாம் :


சாமி :


ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் விவேக் ஒரு பிராமணனாக நடித்திருந்தார். சமத்துவத்தின் முக்கியத்துவம், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் போன்ற முக்கியமான விழிப்புணர்வு செய்தியை காமெடி மூலம் மக்களுக்கு உறைத்தார். பல இடங்களிலும் இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மீம் டெம்ப்ளேட்டா ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 



திருமலை :


வேலை தேடும் ஒரு இளைஞனாக நடித்த விவேக் இன்டர்வியூவுக்கு செல்ல சாலையில் அங்காங்கே போடப்பட்டு இருக்கும் தடுப்புகளை வைத்து கிண்டலாக சமூகத்தில் நடக்கும் அவலங்களை பற்றி நகைச்சுவையுடன் கூறி இருந்தார். 


 




ரன் :


நண்பனை தேடி வந்த இடத்தில் பணம் பொருள் என அனைத்தையும் இழந்து மிகவும் கஷ்டப்படும் நேரங்களில் தன்னுடைய பெற்றோருடன் இருக்கும் போது அவர்களை எப்படி அவமரியாதை செய்தார் என்பதை  நினைத்து பார்ப்பதை காமெடியுடன் சொல்லி இருந்தாலும் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற முக்கியமான செய்தியை அதன் மூலம் தெரிவித்து இருந்தார். அதே போல போலி சாமியார்களை நம்பி ஏமாறும் மக்களுக்கு அதன் உண்மையான முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார். 



உள்ளம் கொள்ளை போகுதே :


தண்ணீர் பிரச்சனையால் தொடர்ச்சியாக இன்னல்களை சந்திக்கும் இளைஞனாக மக்களின் தண்ணீர் பிரச்சினையை சாடும் வகையில் காமெடி கலந்து சொல்லி இருப்பார். 


 



காதல் சடுகுடு :


கிராம மக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்து அதை வளர்க்க முயற்சிக்கும் ஒரு இளைஞனாக நடித்திருந்தார். இப்படத்தில் கிராம மக்கள் இடையே இருக்கும் மூடநம்பிக்கை, கடவுள் மீதும் மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கை, அதன் மூலம் வழங்கப்படும் தண்டனைகள் என பல முக்கியமான செய்திகளை காமெடி சேர்த்து வெளிப்படுத்தினார்.


மீசைய முறுக்கு :


ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என கண்டிப்பாக பேசும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஆங்கில வழி கல்வி மட்டுமே தவிர ஆங்கிலம் ஒரு அடையாளம் அல்ல. அது வெறும் ஒரு மொழி. தமிழ் தான் நம்முடைய அடையாளம் நம் மொழி என ஆணித்தரமாக அவர் பேசிய வசனம் பலருக்கும் சாட்டையடியாக இருந்தது.