கோவை மக்களவை தொகுதி 1952 ம் ஆண்டு முதல் இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக கடைசியாக கடந்த 1996 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1998 மற்றும் 2014 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. மற்ற தேர்தல்களில் கோவை தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருந்தது. இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை தொகுதியை கைப்பற்றும் முனைப்போடு, முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக திமுக களமிறக்கியுள்ளது.
களமிறங்கிய டிஆர்பி ராஜா
செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற நிலையில், முத்துசாமி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து வருகிறார். முத்துசாமி மென்மையான போக்கை கடைபிடித்து வந்த நிலையில், அதிரடியான செயல்பாடுகளை கொண்ட டிஆர்பி ராஜா தேர்தலுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் தயவிற்காக தொழில் துறையை சார்ந்தவர்கள் பாஜக பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், அண்ணாமலைக்கு செக் வைக்கும் வகையிலும் தொழில் துறை அமைச்சரான டிஆர்பி ராஜாவை முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதற்கேற்ப தொழில்துறை மற்றும் வணிகர்களின் பிரச்சனைகளை கேட்டு வரும் டிஆர்பி ராஜா, அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து வருகிறார். மாநில அரசு சார்ந்து கோவையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுக்க திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென, வாக்குகள் பாஜக பக்கம் செல்வதை தடுக்கும் பணியை திறம்பட செய்து வருகிறார், டிஆர்பி ராஜா. அதுமட்டுமின்றி அரசியல் களத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு அதிரடியான எதிர் கருத்துகளை முன்வைத்து கவனம் ஈர்க்கிறார்.
தொகுதி வாரியாக வார் ரூம்
திமுக சட்டமன்ற தொகுதி வாரியாக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பூத் கமிட்டி அமைத்துள்ளது. தொகுதிக்கு ஒரு தேர்தல் பணிமனை அமைத்து தீவிர பிரச்சாரம் செய்வதுடன், சமூக வலைதளங்கள் மூலமாகவும், தின்னைப் பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் மூலமும் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக, அண்ணாமலை என்ற இரண்டு தரப்பையும் வீழ்த்தும் நோக்கத்தோடு, டிஆர்பி ராஜாவின் தலைமையின் கீழ் உள்ள ஐடி விங்க் எனப்படும் தகவல் தொழில்நுட்ப அணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மூலம் தொகுதியின் அனைத்து கள நிலவரங்களையும் அறிந்து கொள்வதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் ஏதுவாக ’வார் ரூம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அனைத்து தரப்பு நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கோவை வடக்கில் 22, கோவை தெற்கில் 11, சிங்காநல்லூரில் 21, பல்லடத்தில் 32, சூலூரில் 29, கவுண்டம்பாளையத்தில் 63 அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப அணியினரால் தொகுதிக்கு தலா ஒரு வார் ரூம் அமைக்கப்பட்டு தேர்தலுக்கான பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
வியூகங்கள் கைகொடுக்குமா?
கோவை தொகுதியில் திமுக பலவீனமாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து கட்சி கட்டமைப்பை மேம்படுத்துதல், வாக்காளர்களின் ஆதரவை பெறுதல் உள்ளிட்ட பணிகளை திமுகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்தும், பாஜக ஆட்சியை விமர்சனம் செய்தும் திமுகவினர் பரப்புரை செய்து வருன்றனர். இந்த நிலையில் கோவையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக இருப்பதாலும், திமுக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிவதாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக திமுகவினர் நம்புகின்றனர். அதேபோல மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட திட்டங்களும், புதிய வாக்குறுதிகளும் பெண்கள் ஆதரவை தேடித்தரும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம் அதிமுக பலம் வாய்ந்த பகுதி, அண்ணாமலை என்ற நட்சத்திர வேட்பாளர் என்ற இரட்டை சவாலை சமாளித்து திமுக வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.