Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலில், வாரிசுகளின் பெயர்கள் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோக மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகியவற்றிற்கு தல ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக, கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகள் போக, மீதமுள்ள 21 மக்களவை தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.
வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்:
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியபோக மீதமுள்ள, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி) ஆகிய தொகுதிகளில் திமுக களம் காண்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளார். அதில் ஏற்கனவே மக்களவை உறுப்பினர்களாக உள்ள பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாத ஈரோடு, ஆரணி, கோவை மற்றும் தேனி போன்ற தொகுதிகளில் இந்த முறை திமுக களம் காண்கிறது.
மீண்டும் வாரிசுகளுக்கு வாய்ப்பா?
ஏற்கனவே எம்.பிக்களாக இருக்கும் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், கவுதம சிகாமணி மற்றும் செந்தில் குமார் ஆகியோர் வாரிசு கோட்டாவில் தான் எம்.பிக்களானதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த முறையும் மேற்குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுபோக புதியதாக, அமைச்சர் கே.என். நேரு மகன் அருண் நேரு, சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு மற்றும் வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி பிரபு ஆகியோரும், இந்த முறை மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போதைய திமுக எம்.பிக்கள்:
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அதன்படி தற்போது ஜெயக்குமார், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன்,டி.ஆர். பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், செந்தில்குமார், அண்ணாதுரை, கவுதம சிகாமணி, எஸ். ஆர். பார்த்திபன், ஆ.ராசா. சண்முக சுந்தரம், வேலுச்சாமி, பாரிவேந்தர், ரமேஷ், ராமலிங்கம், பழனிமாணிக்கம், கனிமொழி, தனுஷ் எம். குமார் மற்றும் ஞானதிரவியம் ஆகியோர் தற்போது திமுக எம்.பிக்களாக உள்ளனர்.