Lok Sabha Elections 2024 TN: நாடாளுமன்ற மக்களவைத் தேர்ததில் தி.மு.க. கூட்டணியில் உள்ள, காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தமிழ்நாட்டின் 9 தொகுதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன.


மக்களவைத் தேர்தல் - திமுக கூட்டணி:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டு, பரப்புரைக்கு தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயாக கட்சி உள்ளிட்ட பல சிறு கட்சிகள் இணைந்துள்ளன. மறுமுனையில் அ.தி.மு.க. கட்சியானது தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது. அதேநேரம், ஆளும்கட்சியான தி.மு.க.வில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி என ஒரு பெரும் பட்டாளமே உள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், தொகுதிகளை இறுதி செய்து வேட்பாளர்களை  தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.


காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை?


திமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரசுக்கு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு உறுதியானாலும், எந்தெந்த தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை. மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளும் இன்று இறுதி செய்யப்பட உள்ளது.


கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறையும் அதே தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், திருவள்ளூர், திருச்சி மற்றும் கரூர் தொகுதிகளில்,  தற்போதுள்ள எம்.பிக்களை மீண்டும் களமிறக்க வேண்டாம் என திமுக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், காங்கிரஸ் கட்சி கேட்ட 10 தொகுதிகளே அவர்களுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு: 


திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை சார்ந்து, மதிமுகவிற்கு திருச்சி அல்லது விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.