தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு காலத்தை நீட்டித்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிகரிக்கும் பொதுப்போக்குவரத்து
பேருந்து, ரயில், விமானம், கப்பல் ஆகியவை இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சாதனங்களாக திகழ்கிறது. இதில் ரயில்கள் மின்சார ரயில், விரைவு ரயில், பாசஞ்சர், அதிவிரைவு என பல வகைகளில் கட்டண வித்தியாசத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் சாதாரணம், விரைவு, அதிவிரைவு ஆகிய முறைப்படியே இயக்கப்பட்டு வருகிறது. என்னதான் சொந்தமாக வாகனங்கள் வைத்திருந்தாலும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பொதுபோக்குவரத்தில் பயணிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பதிவு காலம் அதிகரிப்பு
இரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி பயணம் செல்கிறமோ, இல்லையோ டிக்கெட்டை முதலில் புக் செய்திருந்தால் ஒரு செலவு மிச்சமாகிறது. ஏனெனில் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் தனியார் பேருந்தில் அதிக விலை கொடுத்து பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. பண்டிகை அல்லது விடுமுறை காலம் வந்துவிட்டால் தனியார் பேருந்துகளில் விண்ணை முட்டும அளவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் அரசு பேருந்துகளை நாடி வரும் நிலை ஏற்படுகிறது. பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு சேவைகளை அதிகரித்தும், குறைத்தும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் எஸ்.இ.டி.சி எனப்படும் தொலைதூரங்களுக்கு செல்லக்கூடிய அதிவிரைவு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அரசு பேருந்துகளை பொறுத்தமட்டில் எப்போது பயணித்தாலும் ஒரே விலை தான். அதேசமயம் ஓராண்டில் குறிப்பிட்ட முறைக்கும் மேல் பயணித்தால் கட்டண சலுகையும் வழங்கப்படும் என்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அரசு பேருந்துகளில் அலைமோதும். இப்படியான நிலையில் அந்த விதியை மாற்றி முன்பதிவு காலமானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
60 நாட்கள்:
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் பணி நடைமுறையில் இருந்து வந்தது. இது மார்ச் 15 ஆம் தேதி முதல் 60 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. எனவே பயணிகள் மொபைல் செயலி மற்றும் www.tnstc.in ஆகியவை மூலம் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.