தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு தொகுதி தான் கடலூர் நாடாளுமன்ற தொகுதி.

 

கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய கடலூர் நாடாளுமன்ற தொகுதி தற்போது கூட்டணி கட்சிகள் வசம் உள்ளது.

 

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு, பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.கக்கும், என கடலூர் நாடாளுமன்ற தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு  இந்த முறை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ள டிஆர்விஎஸ் ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளதாலும், தொகுதி மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுக இந்த முறை அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

 

அதிமுகவை பொறுத்தவரை கடலூர் மாவட்டத்தில் நான்கு மாவட்ட கழகங்கள் உள்ளன. இதில் மூன்று மாவட்ட கழகச் செயலாளர்கள் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளடக்கி உள்ளனர். ஏற்கனவே அதிமுக மாவட்ட செயலாளர்கள் இடையே ஒற்றுமை இல்லா தன்மை நிலவுவதாகவும், சட்டமன்றத் தேர்தலில் இதன் காரணமாக தோல்வி அடைந்ததாகவும் அதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுதாகவும் அதிமுக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்றி முதல்முறையாக தேர்தலை சந்திக்கின்றனர். அவர் முதல் முதலாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதி உள்ளடக்கிய கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று ஆரம்பத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

பாஜக கூட்டணிலுள்ள பாட்டாளி மக்கள் கட்சி என்.எல்.சி விவகாரம், சமீபத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு, விருத்தாச்சலம் மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பது போன்ற விவகாரத்தில் தனது எதிர்ப்பை வலுவாக தெரிவித்து வந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாமக போட்டியிட தொடர்ந்து விருப்பம் தெரிவித்து முனைப்பு காட்டியதும் தெரிகிறது.

 

இதில் தனித்துப் போட்டியிடுவதையே தனது தனித்துவமாக கொண்டு தேர்தலை சந்திக்கும்  நாம் தமிழர் கட்சி மட்டும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திரு. மணிவாசகன் என்பவர் போட்டியிடுகிறார்.

 

கூட்டணி கட்சிகள் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தயாராகி வருகின்றனர்.