Lok Sabha Election 2024: ஒராண்டாக தொடரும் கலவரத்தை தொடர்ந்து மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூரில் இன்று வாக்குப்பதிவு:
மணிப்பூரில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த ஓராண்டிற்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
நூதன முறையில் வாக்குப்பதிவு:
மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில், 32 தொகுதிகளை அடக்கியது இன்னர் மணிப்பூர் மக்களவை தொகுதியாகவும், மீதமுள்ள 28 தொகுதிகளை உள்ளடக்கியது அவுட்டர் மணிப்பூர் தொகுதியாகவும் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில் இன்னர் மணிப்பூர் தொகுதியிலும், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அவுட்டர் மணிப்பூரில் மீதமுள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் வரும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒரு தொகுதிக்கே ஒரே நேரத்தில் வாக்குப்பதிவை நடத்த முடியாத சூழலில் தான் மத்திய அரசு இருப்பதாகவும், இவர்கள் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என முழங்கி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.
சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள்:
காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னர் மணிப்பூரில் மொத்தம் 9.91 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இன்னர் மணிப்பூரில் மொத்தமாக 1,319 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இனக்கலவரம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக 29 சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவுட்டர் மணிப்பூரில் மொத்தம் 10.22 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த தொகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 22 சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மத்திய ஆயுதப் போலீஸ் படைகளை அனுப்புவது உள்ளிட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
வேட்பாளரை நிறுத்தாத பாஜக..!
இன்னர் மணிப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மாநில கல்வி அமைச்சர் தௌனோஜாம் பசந்த குமார் சிங் மற்றும் காங்கிரஸ் சார்பில் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் உட்பட மொத்தம் 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட அவுட்டர் மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணியின் கே திமோதி ஜிமிக், காங்கிரஸின் ஆல்ஃபிரட் கங்கம் ஆர்தர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கோ ஜான் மற்றும் அலிசன் அபோன்மாய் ஆகியோருக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக இந்த தொகுதியில் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. அதேநேரம், அதன் கூட்டணிக் கட்சியான NPF க்கு ஆதரவை அறிவித்துள்ளது.