சொந்த கிராமத்தில் ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தனது அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர் விட்டு அழுது பேச முடியாமல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தியதால் மக்கள் ஆறுதல் கூறினர்.


 


 




 


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளராக ஜோதிமணி கை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சொந்த கிராமமான பெரிய திருமங்கலம் பகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.


 


 




 


பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய வேட்பாளர் ஜோதிமணி: மக்கள் நிறைய பேர் நூறு நாள் வேலைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு வேலையும் சரியாக இல்லை, சரியான சம்பளமும் வருவதில்லை. சிலிண்டர் விலை உயர்ந்து விட்டது. இதுபோன்ற நிலைமைகளை மாற்ற கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சதுதான் நான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று கூறி ஓட்டு கேட்க வேண்டியது இல்லை. ஏனென்றால் நான் 4 வருடம் ஒன்பது மாதம் 24 நாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு பணிகளை சிறப்பாக செய்துள்ளேன், பல நாட்கள் நம்முடைய ஊருக்கு இரவில் தான் வந்துள்ளேன் அந்த அளவுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது.


 


 




 


பேசிக் கொண்டிருந்த வேட்பாளர் ஜோதிமணி, அம்மா இருந்திருந்தால் பணிச்சுமை தெரிந்திருக்காது என பேச வந்தபோது, கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேசிய அவர், நீங்கள்தான் எனக்கு குடும்பம் போல் இருந்தீர்கள். அதனால் எல்லோருக்கும் நன்றி என பிரச்சாரத்தை தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு கண்ணீருடன் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அவருக்கு அங்கிருந்த மக்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் சோகமயமாய் காட்சியளித்தது.