திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சார கூட்டத்தில், தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய்யையும், புரளியையும் பரப்பி வாக்கு வாங்க நினைக்கின்றார் பிரதமர் மோடி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.  


திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில்  முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு 


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாத்துரைக்கு வாக்கு சேகரிக்க திருவண்ணாமலையின் முக்கிய வீதியான கள்ளக்கடை மூலையில் இருந்து காந்தி சிலை வரையில் நடைபெயர்ச்சி மேற்கொண்டு காய்கறி கடை, மளிகை கடை மற்றும் அண்ணாமலையார் கோயிலின் அருகே உள்ள கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை அடுத்த சோமசுப்பாடியில் பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாத்துரைக்கும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தனுக்கும் வாக்கு சேகரித்தார்.  




தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,


திருவண்ணாமலையும்  திமுகவையும் பிரிக்க முடியாது, திமுகவிற்கு திருவண்ணாமலை என்றும்  வெற்றி தான் திமுகவிற்கு ஆற்றல்மிகு உறுப்பினர்களை கொடுத்த மண் திருவண்ணாமலை மண். திமுகவின் வளர்ச்சியில் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் உறுதுணையாக இருந்துள்ளனர். கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு வித்திட்ட உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிய சிறப்புமிக்க பகுதி இது, இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்த பகுதி வித்திடப் போகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சி.என்.அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவரின் பெயரேபோதும் வெற்றிக்கு. இவரை சென்ற முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதேபோல் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் எம்எஸ் தரணி வேந்தன் போட்டியிடுகிறார். இவரது குரல் ஆரணியின் குரலாக டெல்லியில் உரைக்க உதயசூரியன் தினத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.




தேர்தல் களம் இரண்டாவது விடுதலை போராட்டம்


நீங்கள் ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதியில் உள்ள மக்களிடமும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்க வேண்டும். இந்தத் தேர்தல் களம் இரண்டாவது விடுதலை போராட்டம். இந்த ஜனநாயக போர்க்களத்தில் பேரறிஞர் அண்ணா சொன்னது தான், நான் எண்ணி பார்க்கிறேன். இரண்டு எஜமானர்கள் உள்ளனர் என்று அண்ணா கூறுவார் 'ஒன்று எங்கள் மனசாட்சி' மற்றொன்று "இந்த நாட்டு மக்கள்". இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மனசாட்சி படி மக்களுக்காக நல்லாட்சி நடத்துபவன். தமிழ்நாட்டைப் போன்று டெல்லியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் உங்களது ஆதரவை கேட்டு வந்திருக்கிறேன். இந்தியா எனும்  அழகிய நாட்டை அழித்து விடாமல் என நிக்கிறார்கள். அதனை தடுக்க இந்தியா கூட்டணிக்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும். அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுகிற தமிழ்நாட்டைப் பாதுகாக்கின்ற பிரதமர் வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படிப்பட்ட பிரதமரைத்தான் இந்தியா கூட்டணி வழங்கும். இந்தியாவில் எங்கும் சமத்துவம் திளைக்க நாம்  முதலில் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 




பாஜக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்


பாஜக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும். இந்த நாட்டினுடைய ஒவ்வொரு குடிமகனும் அவர்களை எதிர்த்து வாக்களிக்க தயாராகி விட்டனர். இந்த செய்தி ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய்யையும் புரளியையும் பரப்பி வாக்கு வாங்க நினைக்கின்றார் பிரதமர் மோடி. இதனால்தான் தனது கூட்டணியாக இருக்கின்ற ஐடி துறையை விட்டு ஜூன் மாதம் வரை காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று கூறுகின்றார். அமலாக்க துறையை விட்டு ஆம் ஆத்மி எம்பிக்கு பெயில் கொடுக்க ஒத்துக் கொள்கிறார். இடி, ஐடி, சிபிஐ இதெல்லாம் போதாது என்று நாட்டு மக்களை குழப்ப ஆர்.டி.யும் கூட்டணியில் சேர்த்துள்ளார். மோடி சொன்னால் இனி மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கு தெரிந்ததால் புரளி வித்தை காண்பிக்கின்றார். ஆகவே அனைவரும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களித்து மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சூளுரைத்தார்.


இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு , அமைச்சர் செஞ்சி மஸ்தான், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த கூட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.