மக்களவை தேர்தலுக்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று தொடங்குகிறது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்களவை தேர்தல்
இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளதோடு தேர்தலையும் சந்திக்கிறது. இதற்கான தொகுதி பங்கீடும் சுமூகமாக முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதல் பரப்புரை
இந்நிலையில் இன்று முதல் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்கான தனது பரப்புரையை தொடங்குகிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அவர் இந்த பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சியில் தான் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரிக்கிறார். இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இதற்காக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர். மேலும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு காரில் செல்லும் முதலமைச்சர் அதன்பிறகு இரவு தஞ்சாவூர் செல்கிறார். அங்கு தனியார் ஹோட்டலில் தங்கும் அவர், நாளை தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டுயிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் வருகை காரணமாக சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றமானது செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Lok Sabha Election 2024: திமுக கூட்டணியில் வேட்பாளர் திடீர் மாற்றம்.. அந்த வீடியோதான் காரணமா?