மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை திமுக தொடங்கியுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். 


மக்களவை தேர்தல் 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமே தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக,பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. 


ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்து விட்டது. மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் மார்ச் 27 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனிடையே இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கி உற்சாகமாக மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். 


முதலமைச்சர் ஸ்டாலின் 


அந்த வகையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் நேற்று தனது மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கினார். திருச்சியில் போட்டியிடும் துரை வைகோ, பெரம்பலூரில் போட்டியிடும் அருண் நேரு ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். 


இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் ஸ்டாலின் இரவு தங்கிய நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் முரசொலி மற்றும் நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி வந்து அங்கிருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை வருகிறார். இவர் ஏப்ரல் 17 ஆம் தேதி தனது பரப்புரையை நிறைவு செய்கிறார்.


அமைச்சர் உதயநிதி 


இதனிடையே தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். மத்திய சென்னை வேட்பாளரான தயாநிதி மாறனை ஆதரித்து இன்று காலை உதயநிதி பரப்புரை மேற்கொள்கிறார். 




மேலும் படிக்க: CM Stalin: "ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுகிறது" திருச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்!