மக்களவை தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவானது இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த 96 தொகுதிகளிலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் இன்று இரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிக்கையாக வெளியிடும். 


2024 மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவின் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலை 5 மணி வரை தோராயமாக 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளில் 75.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனை தொடர்ந்து, ஆந்திராவில் 68.04 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 68.01 சதவீதமும், ஜார்கண்டில் 63.14 சதவீதமும், பீகாரில் 54.14 சதவீதமும், மகாராஷ்டிராவில் 52.49 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 56.35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 


மாநில வாரியாக 4ஆம் கட்ட வாக்களிப்பு விகிதம் பின்வருமாறு:



  1. ஆந்திரப் பிரதேசம்: 68.04%

  2. பீகார்: 54.14%

  3. ஜம்மு காஷ்மீர்: 35.75%

  4. ஜார்கண்ட்: 63.14%

  5. மத்தியப் பிரதேசம்: 68.01%

  6. மகாராஷ்டிரா: 52.49%

  7. ஒடிசா: 62.96%

  8. தெலுங்கானா: 61.16%

  9. உத்தரப் பிரதேசம்: 56.35%

  10. மேற்கு வங்காளம்: 75.66%


எத்தனை 3 மணிநிலவரப்படி எத்தனை சதவீத வாக்குகள்


நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலின் 96 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. இன்று நடைபெற்ற 96 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலில் காலை 7 மணி முதல் 9 மணிவரை வெறும் 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியது. அதனை தொடர்ந்து, முதல் 4 மணிநேர நிலவரப்படி, 24 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52 சதவீத வாக்குகள் பதிவாகின. 


தொடர்ந்து, மாலை 5 மணி வரை 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 


எங்கெங்கு தேர்தல் நடைபெற்றது..? 


தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளிலும், ஆந்திராவில் 25 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 13, பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்தியப் பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, ஒடிசாவில் 4, மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 


ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் நடைபெறும் முதல் மக்களவை தேர்தல் இதுவாகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒடிசாவில் 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


இன்று களமிறங்கிய முக்கிய வேட்பாளர்கள் யார் யார்..? 


சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், டிஎம்சியின் முன்னணி தலைவர் மொஹுவா மொய்த்ரா, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரினாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 


மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும், அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளும் பிரதமர் யார் என்பது தெரியவரும்.