அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வரும் 22ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்ட்மிட்டிருந்த நிலையில், இன்று திமுக வெளியிடும் முன் அவசர அவசரமாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீட்டையும் அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ்
அதிமுகவின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் அதிமுக கட்சியில் 2011 முதல் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2014 வரை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை இயக்குனராக பணியாற்றினார். தற்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ளார். மேலும் இவர் ஸ்டார் ஹோட்டல் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) இன்று தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12,095 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள்
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 97 வாக்குச்சாவடிகளும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 16 வாக்குச்சாவடிகளும் என 113 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்களில் வெப் கேமரா பொருத்தப்பட உள்ளது. தேர்தல் பணிக்காக மத்திய அரசு பணியில் உள்ள 136 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.