Lok sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குகளும் சேகரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தபால் வாக்குகள் இன்று தொடங்கியது.
101 வயதிலும் வாக்களித்த மூதாட்டி:
இந்நிலையில் தான் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 101 வயதான, ராமக்காள் தள்ளாத வயதிலும் தபால் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை பூர்த்தி செய்துள்ளார்.காவேரிப்பட்டினம் அப்பாசாமி நாயுடு தெருவைச் சேர்ந்த , இவரது கணவர் சென்னப்ப நாயுடு கடந்த 1993ம் அண்டு இறந்துவிட்டார். இவர் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் ஒன்றின் பூசாரியாக இருந்தார். இந்த தம்பதிக்கு தவமணி என்ற மகள் இருக்கிறார். அவர் வழியாக ராமக்காள் பேரன், பேத்தி மற்றும் கொள்ளு பேரன், பேத்திகளையும் பெற்றுள்ளார்.
இந்த சூழலலில் தான் 12D படிவத்தை பூர்த்தி செய்து தந்த ராமக்காளின் வீட்டிற்கு, தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குப் பெட்டியுடன் சென்றனர். அப்போது வாக்குச் சீட்டை பெற்று தனது வாக்கை பதிவு செய்து, ராக்காம்மாள் வாக்குச் சீட்டை அந்த பெட்டியில் போட்டார். ஜனநாயக கடமையை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையிலான ராமக்காளின் செயல்பாட்டை, தேர்தல் அலுவலர் முரளி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
யார் யாருக்கு தபால் வாக்கு?
வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான 12-டி படிவம் கடந்த மாதம் 25-ம்தேதி வரை தேர்தல் அலுவலர்களால் வீடு விடாக சென்று வழங்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 6 லட்சத்து 8 ஆயிரம் மூத்த குடிமக்களில் விருப்ப அடிப்படையில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு 12-டி படிவம் வழங்கப்பட்டது. அதில் 77 ஆயிரத்து 445 பேர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர். 4 லட்சத்து 51 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளில் 3 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு படிவம் வழங்கப்பட்டது. இதில் 50 அயிரத்து 676 பேர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்தனர். இதுதவிர, 16 செய்தியாளர்களும் 12-டி படிவத்தை பூர்த்தி செய்து தந்தனர். படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதியளித்தார். வாக்குப்பதிவு முதன்மை அலுவலர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல் துறையினர் என 4 பேர் அடங்கிய ஒரு குழு, தகுதியான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.