தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.  




தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூட்டத்தில் பேசும்போது, தூத்துக்குடி ஊரை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல ஊழல் இல்லாத ஆட்சி தேவை. அதற்கு பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள்‌ வெற்றி பெற்றால் பதவியேற்று 6 மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுவதுமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.


பருவமழை காலங்களில் தூத்துக்குடி வெள்ளத்தில் மிதக்கும் நிலையை  மாற்ற பிஜேபி மாமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய அரசின் ஜல் சக்தி திட்டம் மூலம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளில்  வாசலுக்கும் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.  பாஜக வேட்பாளர்கள் மாமன்ற  உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தூத்துக்குடியை மாசு இல்லாத ஊராக சிங்கப்பூரை போல மாற்றுவார்கள். வீடு, சொத்து வரி 50 சதவீதம் குறைக்கப்படும். வணிகர்களுக்கு தொழில் வரி அறவே ரத்து செய்யப்படும். மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் மக்களை தேடி ஆரம்ப சுகாதார நிலையம் மக்களை தேடி வரும்.




தற்போது, 8 மாதமாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியின் மீது  மக்களுக்கு  80 ஆண்டு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. திமுகவால், தமிழகத்தில் இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக ஆட்சியில் ஊழல் மட்டும் விண்ணை தொடுகிறது. இப்போதும் கூட ஒப்பந்த பணிகளை தடையின்றி நடத்த 35 சதவீதம் லஞ்சம் கேட்கிறார்கள். இன்று கூட சட்டமன்றத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து சட்ட மசோதாவை நிறைவேற்றி நாடகமாடி உள்ளனர். நீட் தேர்வு மூலமாக மதுரையை சேர்ந்த இருளர் சமூக மாணவிக்கும்,  திருப்பத்தூர் மாணவிக்கும் மருத்துவ சீட் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தடுக்கவே திமுக ஆட்சியாளர்கள் இன்று மசோதா நிறைவேற்றியுள்ளனர்.


2016ஆம் ஆண்டு நீட் தேர்வு வந்தபின்பு தனியார் மருத்துவக்கல்லூரிகள் மாணவர்களை பிணைய கைதிகளாக வைத்திருந்ததை உடைத்து எரிந்து விட்டோம். இதிலும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீதம் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கல்விகட்டணம் மட்டும் தான் வாங்க வேண்டுமென பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். ஆனால், இங்குள்ள எம்.பி.க்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.




திமுக எம்.பி.க்கள் தமிழ்நாட்டுக்கென எந்த நன்மையும் செய்யாமல் இங்கிருந்து டெல்லி சென்றவர்கள் மத்திய அரசை எதிர்த்து, மத்திய அரசா? மாநில அரசா? என்ற விவாத நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றனர். ஆகவே, சமூகநீதி, சம உரிமைகளை பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. இந்த உண்மையெல்லாம் மக்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஒட்டுமொத்தமாக அடித்து விரட்டப்பட்ட கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் தான் முதலில் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்தது. இலங்கையில் தமிழர்கள் கொன்று குவித்தபோது காங்கிரஸூம், திமுகவும் மவுனமாகவே இருந்தனர். இதே கட்சிகள் தான் கட்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தன. அதன் பலனைத்தான் தற்போது அனுபவித்து வருகிறோம். எனவே காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்களில் நலனை பற்றி பேச எந்த முகாந்திரமும் இல்லை என பேசினார்.




முன்னதாக திருச்செந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில்,அண்ணாமலை பேசும் போது, தமிழகத்தில் பாஜக மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. திமுகவின் எதிரி பாஜக தான். நம்முடைய எதிரி திமுக தான். அதற்கு முன்னோட்டமாக இந்த நகர்புற தேர்தல் உள்ளது.  திமுகவை பொருத்தவரை மக்களுக்கு எந்தவித நன்மை செய்யாமல் வெறும் கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை வாங்கி விடலாம் என்று நம்புகிறார்கள். குறிப்பாக ஆட்சிககு வந்த பிறகு கடந்த 8 மாதங்களாக அதிகமாக பொய் பேசுவது எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கின்றனர். நம்முடைய எதிரி திமுக என்றாலும் கூட காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் சில இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எங்கு எல்லாம் போட்டியிடுகிறோதோ அங்கு அவர்கள் விரட்டபட வேண்டும். தமிழக்தில் பாதி பிரச்சனைக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்றார்.