2009ஆம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம்தான் விஷ்ணு விஷாலும் சூரியும் அறிமுகமாகினர். அதற்குப் பிறகு, குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர். இந்நிலையில் ஒரு வருடம் முன்பு காவல்நிலையத்தில் சூரி ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா இவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கூறப்பட்டிருந்தது. அப்போது இந்த செய்தி வைரலாகி இருந்தது.


விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தமிழக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்ததால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கியதாக நடிகர் சூரி தரப்பில் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்தே அவர் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக அவரது தரப்பு கூறியது. தற்போது ராட்சசன் திரைப்படம் நடித்து 3 வருடங்கள் கழித்து வெளியாக இருக்கும் விஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படமான எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு நேர்காணலில் சூரி குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.



அந்த நேர்காணலில் இனிமேல் சூரியுடன் நடிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில், "எப்போ அந்த விஷயத்தை அவர் செய்தாரோ அப்போதே அந்த நட்பு அங்கு முடிந்தது. ஏன்னா அவர் செய்த விஷயம் அப்போது நடந்த விஷயம் கிடையாது. அது மூன்று நான்கு வருடங்கள் முன்னாள் நடந்த விஷயம். அதன் பிறகு அவர் என்னுடன் 3 படம் பண்ணிருக்காரு. அந்த 3 வருஷம் என்ன நெனச்சு என் கூட பழகுணாரு? எங்க அப்பாவ என்ன நெனச்சாரு. அந்த மூணு வருஷம் எங்க வீட்ல சாப்டாரே, அந்த வலிய வார்த்தையால் சொல்ல முடியாது. அந்த ஒரு வலி மட்டும் தான் வாழ்க்கைல என் கூட கடைசி வரைக்கும் இருக்கும். ஏன்னா அவர் என்னை பற்றி பேசவில்லை, என் அப்பா பத்தி பேசுனாரு. எங்கப்பா மன்னிச்சிடுன்னு சொல்லிட்டு போயிட்டாரு. ஆனா என்னால மன்னிக்கவே முடியாது. எங்கப்பா அவருக்கு என்னலாம் பண்ணிருக்காருன்னு சொல்ல முடியும் என்னால, ஈஸியா ஒரு பிரஸ் மீட் வச்சு அவர் கொடுத்த புகாருக்கு வரி வரியா பதில் சொல்ல முடியும் என்னால. இத நான் செய்யவேண்டிய அவசியம் இல்ல, அவரு என்ன தப்பா புரிஞ்சிகிட்டார் இல்லையா, அதோட முடிஞ்சிடுச்சு. இப்ப இந்த உலகத்துக்குதான் நான் பதில் சொல்லணும். நான் என்னதான் பதில் சொன்னாலும், நான் ஒரு போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன்னு என் மேலதான் தப்பு சொல்லும். அதனால கடைசியா இந்த பிரச்சனை ஒரு நாள் முடியும்ல அப்போ உண்மை என்னன்னு தெரிஞ்சாதான் சரியா இருக்கும். ஆனாலும் அப்போவும் போலீஸ் அதனால விஷயத்த முடிச்சுட்டாங்க. நான் நடிச்சு ஹிட் ஆன நெறைய படத்துக்கு என் சம்பள பாக்கி இன்னும் நான் வாங்காம இருக்கேன். நான் அத வாங்க முயற்சி பண்ணா, போலீஸ் மிஸ்யூஸ் பண்ணிட்டாங்கன்னு சொல்லுவாங்க. அடுத்த படம் கிடைக்காது. சூரி கிட்ட போய் எங்களுக்கு இப்படியெல்லாம் பண்ணனும்ன்னு எந்த அவசியமும் கிடையாது. எங்கப்பா மாடு மேய்ச்சு, அதுல சம்பாரிச்சு, அந்த காசுல படிச்சு, ஐபிஎஸ் ஆஃபிசர் ஆனார். சூரிய விட 100 மடங்கு வலிய அவர் வாழ்க்கைல பார்த்திருக்காரு. 35 வருஷ சர்விஸ்ல எங்க அப்பாவுக்கு ஒரு பிளாக் மார்க் கிடையாது. ஆனா இவரால காலா காலத்துக்கும் எங்கப்பாவோட பேர் சர்ச் பண்ணா இந்த நியூஸ் வரும், இத பத்தின ஆர்டிகள் வரும். இந்த வலிய தந்தவர் கூட நான் ஒரு படம் சம்பாரிக்கணும்னு அவசியம் எனக்கு இல்ல." என்று திட்டவட்டமாக கூறினார்.



கடந்த 2015ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலைக் கதாநாயகனாக வைத்து, 'வீர தீர சூரன்' என்ற திரைப்படத்தை எடுப்பதாக முடிவுசெய்யப்பட்டு, அதில் நடிக்க நடிகர் சூரியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படத்தில் அவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருந்துள்ளதாக சூரி தரப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலாவும் சூரியை அணுகி, மேலும் 2.70 கோடி ரூபாய் கொடுத்தால் நிலம் ஒன்றை வாங்கித்தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரி பணம் கொடுத்தபோதும், நிலம் ஏதும் வாங்கித்தரப்படவில்லையென்றும் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, வெறும் நாற்பது லட்ச ரூபாயை மட்டும் தந்துவிட்டு, ரூ. 2.70 கோடியை தரவில்லை என்றும் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2018ஆம் ஆண்டே சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றும் முடியாததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சூரியின் புகாரைப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதற்குப் பிறகு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சூரி புகார் அளித்தார்.