கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கடலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடலூர் மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகு, நடக்க இருக்கின்ற முதல் தேர்தல். அதனால் இங்கு வந்து பிரசாரம் மேற்கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.  நீட் தேர்வு ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன். அது என்னவென்றால், அதிமுகவை போல நாங்கள் பாஜகவுக்கு அடிமையாக இல்லாமல், போராடி வெற்றி பெறுவோம். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக பச்சை அயோக்கியத்தனம் செய்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கூட அதிமுகவினர் மறைத்து விட்டனர். நாங்கள் அதிமுகவை போல கூவத்தூருக்கு சென்று சசிகலாவின் காலை பிடித்து ஆட்சி அமைக்கவில்லை. மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 



 

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி தமிழகத்தில் திமுக இருக்கும் வரை, உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடிக்கு சவால் விட்டுள்ளார். இது திமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் திமுக ஒரு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. தேர்தல் அறிக்கையில் கூறியது போல, தமிழக வரலாற்றில் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்தது வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தான். அதேபோல கொரோனா நிவாரண நிதியாக 4000  ரூபாய் வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், விலை குறைக்கப்பட்டது ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.



  

வருகிற 19 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. திமுக அரசின் திட்டங்களையும், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையும், நிறைவேற்றி விட்ட திட்டங்களையும் ஒவ்வொரு வீடாக சென்று எடுத்துக்கூறி நீங்கள் அனைவரும் வாக்கு சேகரிக்க வேண்டும். கடலூர் மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அத்தனை பெரும் வெற்றி பெற்று விட்டார்கள் என்ற நல்ல செய்தியை நம்முடைய தலைவருக்கு வருகிற 22 ஆம் தேதி நம்ம அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 



 

முன்னதாக உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக கடலூர் அண்ணா பாலத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகையில் இருந்த மின்விளக்கு திடீரென சரிந்து கீழே விழுந்தது. இதில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூடிய கூட்டதினர் மீது விழுந்த்து இதில் நவநீதம் நகரைச் சேர்ந்த பிரியதர்ஷினி (30), தாயாராம்மாள் (40) உட்பட 2 பேருக்கு தலையில் பலத்த காயம் மற்றும் 3 பேருக்கு லேசாயன காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆட்டோ மூலமாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.