தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 300 இடங்களில் காணொலி காட்சி வழியாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.




அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக முதலீடுகளை அரசு ஈர்த்துள்ளது.  பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திமுகவுக்கு மிக பெரிய வெற்றிகளை தேடி தந்தது. அந்த வெற்றியை உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் தர வேண்டும். சென்னையில் வ.உ.சி.க்கு சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை ஆகியவை திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் தன்னலமற்று விளங்கிய வ.உ.சி.யை, அவரது தியாகத்தை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் வ.உ.சி‌.சிலை வைக்கப்பட்ட குடியரசு தின அணிவகுப்பு வாகனம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


ஆனால் அதை மத்திய அரசாங்கம் புறக்கணித்தது. இருந்தாலும் கூட, மத்திய அரசின் வஞ்சனை நடவடிக்கைகளை ஊர் அறிய செய்யவே தமிழ்நாடு முழுவதும் குடியரசு தின அலங்கார ஊர்தியை பார்வைக்காக அனுப்பி வைத்த எழுச்சியான ஆட்சி இது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மருத்துவ கல்லூரி, தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட பல திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்திற்காக  திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. ஆனால் இவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்திற்கு செய்ததாக பட்டியலிட்டு சொல்ல அதிமுக ஆட்சியில் எதும் இல்லை.




திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று வெளியிட்ட 1641 அறிவிப்புகளில் 1232 அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளது.  திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை 5 முறை சட்டப்பேரவையில் சிறப்பு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. படிக்கவேண்டிய  மாணவர்களை பலிகளாக்கி பலிபீடமாக மாறியுள்ள 'நீட்' எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தால், அவர் யார் சொல்லியோ அந்த மசோதாவை நிராகரிக்கிறார். அப்படியெனில் ஆளுநரை யார் ஆட்டிவைக்கிறார்கள்?.


நியமன பதவியில் இருந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களின் மனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனநாயக அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை அவர் நிராகரிக்கிறார் என்றால் அவர் யாருக்காக செயல்படுகிறார்? எனவே, ஆளுநரின் இந்த போக்கை திமுக நிச்சயம் தட்டி கேட்கும். நாட்டு மக்களின் நலனுக்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைகளை விமர்சித்தால் ஏதோ இந்தியாவையே எதிர்த்து விமர்சிப்பது போல சித்தரிக்கிறார்கள். எனவே உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி தொடர மக்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என பேசினார்.




காணொலி காட்சி முலம் நடைபெற்ற இந்த பிரசார கூட்டத்துக்கு, கனிமொழி எம்பி தலைமை தாங்கினார்.  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.