கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் 76 வது வார்டில் பாஜக சார்பில் கார்த்திக் என்பவர் போட்டியிடுகிறார். இவர் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அந்த வார்டில் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் முனீஸ்வரன் என்ற பாஜக தொண்டர் காயமடைந்தார். இது தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவினருக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கூறி, பாஜக வேட்பாளர் கார்த்திக் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஹெல்மட் அணிந்தும், கைகளில் தாமரை பூக்களை ஏந்தியபடியும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். பேரூர் மெயின் ரோடு சாஸ்தா நகர், முனியப்பன் நகர், பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் பாஜக தொண்டர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இது குறித்து பாஜக வேட்பாளர் கார்த்திக், “நேற்றிரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்த போது திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது அடுத்தடுத்து 4, 5 கற்கள் எங்களை நோக்கி வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் முனீஸ்வரன் காயமடைந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம். பாஜகவினருக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதனால் ஹெல்மட் அணிந்தபடி இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எனது வெற்றியை முறியடிக்க சமூக விரோதிகள் சதி செய்கின்றனர். அதனை முறியடித்து வெற்றி பெறுவேன்” என அவர் தெரிவித்தார்.
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.