வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டில் திமுக சார்பில் மணிமாலா தென்றல் போட்டியிடுகிறார். இவர் திமுக முன்னாள் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகளாவர். மணிமாலா தென்றல் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்றால் நகராட்சித் தலைவராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிமாலா தென்றல் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு எழுதிய ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், “எனது தந்தை தென்றல் செல்வராஜ் கடந்த உள்ளாட்சி தேர்தலில் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அவர் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக (முன்னாள்) கழகப் பணி ஆற்றியுள்ளார். எங்கள் குடும்பம் 45 ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தில் பணி ஆற்றி வருகிறோம். எனவே எனக்கு இம்முறை நகர மன்ற தலைவர் பொறுப்பு வழங்க தாங்கள் பரிந்துரை செய்ய தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் என்னை தேர்வு செய்யும் பட்சத்தில் கழக பணிக்கு ரூபாய் 50 லட்சம் வரை செலவு செய்ய தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணிமாலா தென்றல் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மேயர், நகராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சில பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், திமுக கட்சி பொறுப்பாளர்கள் தங்களது மனைவி மற்றும் மகள்களை தேர்தலில் களமிறங்கி இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் முன்பே நகர மன்ற தலைவர் பதவிக்கு தேர்வு செய்தால், கட்சி பணிகளுக்கு 50 இலட்ச ரூபாய் வரை செலவு செய்ய தயாராக இருப்பதாக கூறிருப்பது வசதி இருப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்பதை வெளிகாட்டும் வகையில் இருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.