தேமுதிக தனித்து போட்டி

 

தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பாமக, பாஜக, நாதக, மநீம போல தேமுதிகவும் தனித்து போட்டியிடுகிறது. முன்னதாக கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் தேமுதிகவின்  தலைவர் விஜயகாந்த், பீனிக்ஸ் பறவைபோல் நாம் மீண்டெழுந்து, தோல்வியைச் சரிசெய்து வருங்காலத்தில் இமாலய வெற்றிபெறுவோம். தொடர்ந்து களமாடுவோம் வெற்றி பெறுவோம், வேட்பாளர்களும், முரசு சின்னமும் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.




 

இந்தத் தேர்தலை தேமுதிக-வினர் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்கள்தான் நமக்கான இலக்கு. எனவே, இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல் என்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் உழைக்க வேண்டும். திமுக தவிர அனைத்து கட்சிகளும் தற்போது தனித்துப் போட்டியிடுவதால் நம்முடைய பலத்தை நிரூபிக்க நல்ல வாய்ப்பு என அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 

தொடர் தோல்வி

 

தேமுதிக என்ற கட்சிக்கு விஜயகாந்த் மட்டுமே முகமாகவும் முகவரியாகவும் இருந்து வந்தார்.  விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்து கட்சி சரிவு பாதையில் சென்று வருகிறது. திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்ட தேமுதிக, 2006, 2009 ஆகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான  வாக்கு சதவீதத்தை கைப்பற்றியது. அதேபோல் கட்சி தொடங்குவதற்கு முன்பே விஜயகாந்தின் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிட்ட பலர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தனர். 



 

2011 ஆம்  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.  அதிமுகவினர் மோதல் காரணமாக அந்த கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அதன்பிறகு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 60 இடங்களிலும் டெபாசிட் தொகையை இருந்தது.  சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியை மட்டுமே கைப்பற்றியது. 

 

காஞ்சியில் காணாமல் போன தேமுதிக

 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது நடைபெறும் நகர் மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தேமுதிக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒரே ஒரு இடத்தில் கூட வேட்பாளரை நிறுத்தாதது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 பதவிகளுக்கு 409 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட உள்ளது. 



 

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் மாநகராட்சி பதவிகளுக்கான போட்டியில் 51 இடங்களில் திமுக 42 இடங்களையும், அதிமுக 45 இடங்களையும், பிற கட்சிகளான பாமக 42 , பாஜக 31, நாம் தமிழர்  25 க்கும் மேற்பட்ட இடங்களிலும், மக்கள் நீதி மையம் 16 இடங்களிலும், கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் போட்டியிடுகிறது. தமாகா 4  இடங்களில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சி , முஸ்லிம் லீக், ஜனதா தளம், அமமுக கூட ஆகியவை ஓரிரு இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் மாநில கட்சி அந்தஸ்தில் இருக்கும் தேமுதிக ஒரு இடங்களில் கூட போட்டியிடாது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி ஆகிய இடங்களில் வெறும் பத்துக்கும் குறைவான இடங்களில் மட்டுமே தேமுதிக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.