மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்த சோபனா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சி 42ஆவது வார்டில் பிஜேபி சார்பில் போட்டியிடுகின்றேன்.  இதே வார்டில் திமுக  சார்பில் செல்வி என்பவர் போட்டியிடுகிறார். அவரிடம் வெவ்வேறு வரிசை எண்களில் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. இது விதிகளுக்கு எதிரானது.  இது தொடர்பாக அலுவலரிடம் தெரியப்படுத்திய நிலையிலும் செல்வியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மின்னஞ்சல் உட்பட மனு அளிக்கப்பட்ட நிலையிலும், நடவடிக்கை இல்லை.

 

ஆகவே மதுரை மாநகராட்சி 42வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வியின் வேட்பு மனுவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு,நிர்வாக காரணங்களுக்காக வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

 



கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரத்தைச் சேர்ந்த ஜான்லீபன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பேரூராட்சியில் 15-வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மனு பரிசீலனை முடிந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதற்காக  B form வழங்கப்படும். நெய்யூர் பேரூராட்சியில் 1,2, 4, 6, 7, 11 ஆகிய 6 வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களிடமிருந்து கையொப்பம் பெறப்பட்டு B.form வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 6, 8, 9, 13 ஆகிய வார்டுகளில் முறையே ஜெயப்பிரியா, நளினி ஞான சுகந்தி, ஸ்ரீஜா, விசுவாசம் ஆகியோர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போல் போலி படிவத்தை அளித்துள்ளனர். இது சட்டவிரோதமானது. ஆகவே நால்வருக்கும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை ஒதுக்கக்கூடாது" என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, நிர்வாக காரணங்களுக்காக வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.