அதிகமான தீப்பட்டி தொழிற்சாலைகளை கொண்ட தொழில் நகரமான கோவில்பட்டி  கடந்த 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவானது. 1998ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2008 ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது.1969 முதல் 1974 வரை திமுக சார்பில் பி.பெரியசாமி தேவர், 1986 முதல் 1991 வரை திமுக சார்பில் ஆர்.தம்பி பாலசுப்பிரமணியம்,  1996 முதல் 2001 வரை திமுகவை சேர்ந்த  பி. பெரியநாயகம் தமிழரசன், 2001 முதல் 2006 வரை அதிமுகவை சேர்ந்த அ.விமலா ராணி,  2006 முதல் 2011 வரை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.மல்லிகா,  2011 முதல் 2016 வரை அதிமுகவை சேர்ந்த எஸ்.கே. ஜான்சிராணி ஆகியோர் நகர்மன்றத் தலைவர்களாக கோவில்பட்டி நகராட்சியில் பொறுப்பு வகித்து உள்ளனர். 




கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 39,336 ஆண்கள், 40,742 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 80,096 வாக்காளர்கள் உள்ளனர். 85 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி நகராட்சிக்கு தற்போது  நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.




அதிமுக கூட்டணியில்   தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 1 வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் கடந்தகாலங்களில் ஏற்கனவே நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்.  இரட்டை இலை சின்னம் மிகப்பெரிய பலமாக பாசிட்டிவாக உள்ளது.  பலவீனம் என்று பார்க்கையில் அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையின் சார்பில் நிதி உதவி இல்லாத காரணத்தினாலும், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு பண உதவி கேட்டு தன்னை யாரும் அணுக வேண்டாம் என வெளிப்படையாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இதனால் சொந்த பலத்தில் களம் காண வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு போராட்டமயமாக உள்ளது. சொந்த பலத்தில் 5 பேர் முதல் 7 பேர் வரை வெற்றி பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சியின் தலைவலியான குடிநீர் பிரச்சினை தற்போது தீர்வு காணப்பட்டு உள்ளது, குண்டும் குழியுமான சாலைகள் பேவர் பிளாக்காக மாற்றப்பட்டது போன்றவைகள் காரணமாக கூடுதலாக மூன்று வார்டுகள் அதிமுக வெற்றிக்கு உதவலாம் என்கின்றனர் பொதுமக்கள்.




அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் ஒரு வார்டுக்கு 50 முதல் 100 ஓட்டுக்களை பிரிக்க சாத்தியக்கூறு உள்ளதால் அதிமுகவின் வெற்றிக்கு தடங்கலாக உள்ளது. ஆளுங்கட்சியான திமுக 21 இடங்களிலும், மறுமலர்ச்சி திமுக 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் களம் காணுகிறது. இதுதவிர பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக மற்றும் சுயேச்சைகளும் களத்தில் நிற்கின்றனர். திமுக கூட்டணி வேட்பாளர்களை பொருத்தவரை ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடுகிறோம். என்பது மிகப்பெரிய பாசிட்டிவ். பொங்கல் சிறப்பு தொகுப்பில் குளறுபடி, பொங்கல் சிறப்பு தொகையாக பணம் தராதது, சில வார்டுகளில் பழைய கட்சிக்காரர்களை புறக்கணித்து புதிதாக வந்தவர்களுக்கு சீட்டு அளித்திருப்பது போன்றவை நெகட்டிவ் ஆக உள்ளது. கோவில்பட்டி நகராட்சி தேர்தல் முடிவுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.




எது எப்படி இருப்பினும் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் நகர்மன்ற தலைவர் பொறுப்பை கைப்பற்றுவதற்காக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை முகாமிற்குள் கொண்டுவருவதற்கான பணிகளையும் திருவிளையாடல்களையும் கரன்சிகளை காட்டி வித்தைகள் நிகழ்த்துவார்கள் என்பது தொண்டர்களிடையே பேசுபொருளாக உள்ளது.