தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற்றது, இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் பெருநகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் கடலூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி கடந்த வருடம் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து முதல் முறையாக கடலூர் மாநகராட்சி முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி பெண்களுக்கு என தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு 45 வார்டுகளில் 152 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று முடிந்தது.
இதற்கு பின்னர் நேற்று நடந்த வாக்கு என்னும் நாளில், கடலூர் மாநகராட்சியில் மொத்தமாக உள்ள 45 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்- 34, அதிமுக- 6, பாமக- 1, பாஜக- 1, சுயேட்சை -3 இடங்களை பிடித்து உள்ளனர். இதில் தனி பெரும்பான்மையுடன் திமுக 28 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைபற்றி உள்ளது. தனி பெரும்பான்மையுடன் கடலூர் மாநகராட்சியை திமுக கைபற்றி உள்ள நிலையில் முதல் மேயர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது, கடலூர் மாநகராட்சி மேயர் பதிவு பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் வேட்புமனு செய்த நாள் முதல் திமுகவின் மேயர் வேட்பாளர் என இரண்டாவது வார்டு பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ள திமுக கடலூர் மாவட்ட பொருளாளர் VSL குணசேகரனின் மனைவி கீதா குணசேகரன் கூறப்பட்டு வந்தது. ஆனால், இடையில் திமுக கடலூர் நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரி ராஜாவுக்கும் மேயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என அதன் பின்னர் கூறப்பட்டு வந்தது. ஆனால், கடலூர் மாநகராட்சி 20 ஆவது வார்டில் போட்டியிட்ட சுந்தரி ராஜா வெற்றி பெற்று இருந்தாலும் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாள் முதலே சர்ச்சைகள் தொடர தொடங்கின.
ஏனெனில் திமுக சார்பில் தலைமையில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் வெளியிடும் முன்பே திமுக துண்டு அணிந்து மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார், இந்த சம்பவம் அப்பொழுதைய நேரத்தில் கட்சியில் சர்ச்சையை கிளப்பியது, அதே சயத்தில் 27 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக கடலூர் நகர செயலாளர் ராஜா எதிர்த்து போட்டியிட்ட அதிமுக விடம் தோல்வி அடைந்துள்ளார். இவ்வாறு சில சர்ச்சைகள் உள்ள நிலையில் யார் கடலூரில் முதல் பெண் மேயர் பதவியை பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது, இருப்பினும் கட்சியின் தலைமை முடிவே இறுதி முடிவு எனவும் கூறப்பட்டு வருகிறது.