காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (42). இவர் காங்கிரஸ் கட்சியில் ஸ்ரீ பெரும்புதூர் நகர பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர் அணியில் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் குடியிருக்கும் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி 1வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் தனக்கு பதிலாக ஏற்கனவே வார்டு கவுன்சிலராக இருந்த தன்னுடைய மனைவி தனலட்சுமியை சுயேச்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளார்.



 

இந்நிலையில் இவருக்கும் திமுக வேட்பாளரான லில்லி மாணிக்கத்துக்கும் கடும் போட்டி நிலவிவந்த நிலையில், ஸ்ரீ பெரும்புதூர் காவல் நிலையத்தில் உள்ள தனிப்படையினர், ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது பூபாலன் தன் மனைவிக்காக ராமாபுரம் பகுதியில் பொதுமக்களை பட்டா கத்தியை காட்டி மிரட்டி ஒட்டு கேட்டதை, பார்த்த  காவல்துறையினர் பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

மேலும் முன்னாள் வார்டுகவுன்சிலர், தற்போதைய சுயேட்சை வேட்பாளரின் கணவர் பூபாலன் கைது செய்யப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வார்டில் திமுக எளிதாக வெற்றி பெறும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கூட்டணிக் கட்சிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது மட்டுமில்லாமல் பொதுமக்களை பட்டாக்கத்தி காட்டி மிரட்டிய சம்பவத்தில் காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள் இருப்பதால், மறைமுக வருவாய்களை பெருக்க அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் பிரமுகர்கள் இடையே தேர்தலில் வெற்றிபெற போட்டா போட்டி நிலவி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் முன்னாள் மற்றும் இந்நாள் ரவுடிகள் பலரும் தங்களுடைய ஆதரவாளர்களை தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நகர் போன்ற தேர்தல் பதற்றத்துடன் நடைபெற்று வருகிறது. பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றும் போது இன்னும் பதற்றம் அதிகரிக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர