தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் 22 பேரூராட்சிகள் பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள வார்டுகளில் போட்டியிடுவதற்கு பெரும்பாலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் நகர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு பெண்களுக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு நேற்று இறுதி கட்டமாக வேட்பு மனுக்கள் திரும்பி பெற்றுக்கொள்ள கடைசி நாளில் தேனி மாவட்டத்தில் கடைசி நாளில் 342 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. மாவட்டத்தில் 7 வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாளாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி, தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 6 நகராட்சியில் உள்ள 177 வார்டு உறுப்பினர் மற்றும் 22 பேரூராட்சிகளுக்கு 336 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி போடி, பெரியகுளம் ஆகிய 6 நகராட்சிகளில் பெறப்பட்ட 966 வேட்புமனுக்களில் 11 வேட்புமனுக்களும், 22 பேரூராட்சிகளில் பெறப்பட்ட 1,386 வேட்புமனுக்களில் 32 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 154 வேட்புமனுக்களும், 22 பேரூராட்சிகளில் 188 வேட்புமனுக்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் 11, தேனி நகராட்சியில் 47, போடிநாயக்கனூர் நகராட்சியில் 45, கம்பம் நகராட்சியில் 27, சின்னமனூர் நகராட்சியில் 21, கூடலூர் நகராட்சியில் 3 என 154 வேட்புமனுக்களும் 22 பேரூராட்சிகளில் 188 வேட்புமனுக்களும் சேர்த்து மாவட்டத்தில் மொத்தமாக 342 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும், கூடலூரில் 6வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பத்மாவதி எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சின்னமனூர் நகராட்சியில் 25வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அய்யம்மாள் என்பவரும் எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல, 22 பேரூராட்சிகளில் 5 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் (குச்சனூர் - 1, வடுகபட்டி - 4 போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். குச்சனூரில் 7வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த பந்தனம் எதிர்த்து போட்டியிட வேட்பாளர் இல்லாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பெரியகுளம் நகராட்சி வடுகபட்டி பேருராட்சியில் சுயேட்சையாக 1 வது வார்டு வேட்பாளாரக மனுத்தாக்கல் செய்த முத்துசெல்வி என்பவரும், 10 வது வார்டில் சுயேட்சையாக மனுதாக்கல் செய்த ஜெயராம் என்பவரும், 11வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் விமலா, 14வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகிய 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்