தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.




அப்போது பேசிய அவர்,  தமிழகத்தில 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுகதான். 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை தான் இருந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுகவை ஆட்சிப் பீடத்தில் அமரவைக்கும் மனநிலையில் தான் தமிழக மக்களும் இருந்தனர். ஆனால், திமுக சதி செய்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அதனை திரும்ப திரும்ப சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டனர். ஒன்றிரண்டு அல்ல 505 பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆனால், ஆட்சி பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்றதும் தனது முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்துக்கு தான் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், ரத்து செய்ய முடியவில்லை.  நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி ஜனாதிபதி கையெழுத்து போட்டால் தான் முடியும். ஆனால் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதியை மக்களிடம் கொடுத்தார்கள்.




அதுபோல முதியோர் ஓய்வூதியத்தை  1000 ரூபாயில் இருந்து 1500 ஆக உயர்த்துவோம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  1000 ரூபாய் தருவோம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள். தமிழகத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிய இயக்கம் அதிமுகதான். அதிமுக ஆட்சியில் தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். முதலில் பொங்கல் பண்டிகைக்கு  1000 ரூபாய் கொடுத்தோம். 2021 ஆம் ஆண்டு 2500 கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அவர்கள் கொடுத்த பொங்கல் தொகுப்பு பொருட்களும் தரமற்றவை. கடந்த 10 மாத ஆட்சியில் மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. எந்த உருப்படியான திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை தான் நிறைவேற்றி வருகின்றனர். இன்னும் அவர்கள் திட்டங்களை தொடங்கவே இல்லை.


  


எனவே, திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர்களது பொய் வாக்குறுதிகளுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர். தமிழகத்தில் அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நன்றாக பயன்படுத்தி ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெற வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் இழந்த பெருமையை இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் பெற வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்