சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 699 பதவிகளுக்கான உள்ளாட்சி தேடுதல் நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் 48 வார்டுகான திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 12 வார்டுகள் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டுமே திமுக வெற்றி பெற்றது. அதிமுகவிடம் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுகவிடம் உள்ளது.
இதுமட்டுமன்றி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற்றாலும் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டம் என்பதால் சேலம் மாவட்டத்தில் அதிமுக தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்து பலமான கட்சியாக இருந்து வருகிறது. எனவே, சேலம் மாவட்டத்திற்கு திமுக சார்பில் பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டு சேலம் மாவட்டத்தை உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என திமுக கவனம் செலுத்தி வருகிறார்.
இன்று வெளியாகியுள்ள திமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய மூத்த பிரமுகர்கள், முன்னாள் வார்டு கவுன்சிலர்களின் உறவினர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மனைவி, மகன் அல்லது மகள்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீட்டில் இழுபறி நிலவி வருவதால் தற்போது வரை கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என தெரியவில்லை.
சேலம் மாநகராட்சி சேலம் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுகவிடமும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமகவிடமும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுகவிடம் உள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து பாமக ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி பகுதியில் மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.