தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது, நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியில் 55 வார்டுகள், மூன்று நகராட்சிகளில் 69 வார்டுகள், 17 பேரூராட்சிகளில் 273 வார்டுகள் என மொத்தம் 397 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது, இதில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 1790 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 259, பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 259 மற்றும் பொது வாக்குச்சாவடிகள் 414 என மொத்தம் 932 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான 1127 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவுக்கு தேவையான இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது, வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக மாநகர காவல்துறை சார்பில் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் ஆகிய அதிகாரிகள் தலைமையில் போலீசார் அடங்கிய 36 மொபைல் குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த 36 குழுவினருக்கும் தலா ஒரு வாகனங்கள் ஒதுக்கப்பட்டு இந்த வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது, மாநகரில் பதட்டமான வாக்குச்சாவடிகளை இந்த மொபைல் குழுவில் இடம் பெற்றுள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என மாநகர காவல்( கிழக்கு) துணை ஆணையர் சுரேஷ்குமார் தெரிவித்தார், இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
மாநகரில் தேர்தலிலுக்காக 1200 காவலர்கள் மற்றும் சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர், மொத்த வாக்குச்சாவடிகளில் 60 இடங்களில் சின்ன சின்ன பிரச்னை இருப்பதாக கண்டறிந்து அந்த இடங்கள் பதற்றமானவை என முடிவு செய்துள்ளோம், ஏற்கனவே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் போலீஸ் அல்லது போலீஸ் அல்லாத நபர் பாதுகாப்புக்கு இருப்பார்கள். எல்லா மொபைல் குழுவும் பதற்றமான வாக்குச்சாவடியை கண்காணித்து தேவைக்கேற்ப அங்கு செல்வார்கள். மொபைல் குழுவினரை நான்கு குழுக்களாக பிரித்து நான்கு ஆய்வாளர்கள் தலைமையில் 36 மொபைல் குழுக்கள் இவிஎம் மிஷினுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். இதுதவிர துணை ஆணையர் இணையர் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் எல்லோருக்கு ஒரு அதிரடிப்படை குழு கொடுத்துள்ளோம், இவர்களுக்கு ஏற்கனவே ஒவ்வொரு ஏரியா குறித்து பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் என்ன பணி செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை. தேர்தல் அமைதியாக நடைபெறும். பதற்றமான வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா இருக்கும். அங்கு இருக்கும் காவலர்கள் பாடி கேமரா பொருத்தப்பட்டிருக்கும், எனவே அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.