ஒவ்வொரு மனிதனும் அவரவர்களின் வாழ்க்கையில் பல கனவுகளை, சந்தோஷங்களை விட்டு கொடுத்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி தனக்கு பிடித்தவர்கள் நன்றாக வாழ வேண்டும் என செய்த தியாகம் வீணாகி போகும் போது ஏற்படும் வலிக்கு அளவே இல்லை. அந்த துக்கத்தை மிகவும் எளிமையாக கிராமத்து மனம் மாறாமல் எந்த ஒரு கமர்சியல் சமாச்சாரமும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்திய ஒரு படம் தான் இயக்குனர் சசியின் 'பூ' திரைப்படம். இந்த கவிதை வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் :
தமிழ்செல்வனின் “வெயிலோடு போய்” என்ற சிறுகதையை மையமாக வைத்து வெளியான இப்படம் முழுக்க முழுக்க அறிமுக நாயகி பார்வதியை சுற்றிலும் நகர்த்தப்படுகிறது. இது தான் அவருக்கு முதல் படம் என சொல்ல முடியாத அளவுக்கு காதல், ஏக்கம், சோகம், துக்கம் என அனைத்து உணர்வுகளையும் அத்தனை அழகாக வெளிக்காட்டி மாரியாகவே வாழ்ந்து இருந்தார் பார்வதி. ஸ்ரீகாந்த் தான் படத்தின் ஹீரோ என்றாலும் இது ஒரு ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் என்பதை அறிந்தும் ஒதுங்கியே இருந்து சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து இருந்தார்.
கதை சுருக்கம் :
விவரம் தெரியாத வயதில் இருந்தே மாமன் மகன் மீது தீராத அன்பு, பாசம் பின்பு காதலாக மாறினாலும் அது கைகூடாமல் இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகும் மாமன் மகன் மீது இருக்கும் இருக்கும் பாசம் குறையாமல் பழைய நினைவுகளோடு மாமாவின் வீட்டுக்கு சென்ற மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி தான் படத்தின் கிளைமாக்ஸ்.
நிலைத்த கதாபாத்திரங்கள் :
மாரியின் அம்மா, தோழி, பேனாக்காரர், சின்ன வயது மாரி என படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து போன சின்ன சின்ன கதாபாத்திரங்கள் என்றாலும் மனதோடு நிலைத்து நின்றார்கள். அந்த இரட்டை பனைமரம் மாரியின் காதல் அடையாளங்களாக நிமிர்ந்து நின்றன. மாரியின் எதிர்பார்ப்பில்லாத காதல் ஊரில் உள்ள அனைவருக்கும் புரிகிறது காதலன் ஸ்ரீகாந்தை தவிர.
சசிக்கு பாராட்டு :
இது வரையில் ஆண்களின் முன்னாள் காதலை மட்டுமே ஸ்பாட்லைட் மூலம் பார்த்து வந்த சினிமாவுக்கு பெண்ணின் முன்னாள் காதல் நினைவலைகளை மலர செய்த இயக்குனர் சசி பாராட்டப்பட வேண்டியவர். படத்துக்கு மற்றுமொரு பலமாக அமைந்தது எஸ்.எஸ். குமரனின் இசை. ச்சூ ச்சூ மாரி, ஆவாரம்பூ உள்ளிட்ட பாடல்கள் கிராமத்து வாசத்தை வீசிய பாடல்கள்.
மனித உணர்வுகளை மிக நுணுக்கமாக படம் பிடித்த இப்படம் மிக பெரிய அடையாளமாக வந்திருக்க வேண்டும் ஆனால் படம் வெளியான போது இந்த அற்புதமான படைப்பை கொண்டாட தவறிய திரை ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதை ரசிக்க துவங்கி 15 ஆண்டுகளுக்கு பிறகும் கொண்டாடி வருகிறார்கள். ஒரு சில குறைகள் இருந்தாலும், புரியாத கவிதையாய், அழுத்தமான ஒரு திரைக்கதையாய் பூத்தது 'பூ' திரைப்படம்.