தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்தியாவின் பாரம்பரிய செய்தி நிறுவனமான ABP செய்திக் குழுமம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ‛சி வோட்டர்ஸ்’ உடன் இணைந்து வழங்குகிறது.
கொங்கு மண்டலம்:
நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களையும், 52 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது கொங்கு மண்டலம். நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் கொங்கு பெல்ட்டில் மட்டும் 33-35 வரையிலான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கவுண்டர், அருந்ததியர், தேவேந்திர் குல வேளாளர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குவங்கிகளைக் கொண்டது கொங்கு மண்டலம்.
அதிமுக தலைமையிலான கூட்டணி கொங்கு மண்டலத்தில் 17-15 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 2016-இல் கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது அந்த மண்டலத்தில் 24 தொகுதிகளை இழக்கிறது அதிமுக. அதே நேரத்தில் கருத்துக்கணிப்பின்படி திமுக 24 தொகுதிகளைக் கூடுதலாகப் பெறுகிறது. 46.8 சதவிகிதம் வாக்குகளை இந்த மண்டலத்தில் பெற்ற அதிமுக, இம்முறை 38.6 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது. 36.9 சதவிகிதம் வாக்குகளை பெற்ற திமுக, இம்முறை 43.9 சதவிகிதம் வாக்குகளை பெறுகிறது. இது திமுகவிற்கு பெரிய அளவிலான சாதகத்தை ஏற்படுத்துகிறது. இங்கு அமமுக 3.2 சதவிகிதம் வாக்குகளை பெறுகிறது. மற்ற கட்சியினர் 14.3 சதவிகிதம் வாக்குகளை பெறுகின்றனர்.
திமுக முன்னிலை எதிர்பார்த்ததா?
உண்மையில் 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக கொங்கு மண்டலத்தில் தனது இருத்தலை அதிகப்படுத்தியிருந்தது. உதாரணமாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் இந்த மண்டலத்தில் திமுக வெற்றி பெற்றத் தொகுதிகள் வெறும் 3 . ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணி 10 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. சுமார் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான கொங்கு வேளாளர், கவுண்டர் சமூக மக்கள் வாக்குகளைக் கொண்ட ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கடந்த 25 வருடமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பின்னடைவைச் சந்தித்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரான மனநிலையும் (Anti- Incumbency) கொங்கு மண்டலத்தில் மறைமுகமாக உணரப்பட்டது. ஆனால், இதை திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கருத்தும் அந்தச்சமயம் முன்வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்கள் அத்தனைக்கும் பதில் அளிக்கும் வகையில் தற்போதைய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.