காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. அதே போல் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்படி தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தை பொருத்தவரை கரூர் மாவட்ட கவுன்சிலர் (8வது வார்டு), க.பரமத்தி ஒன்றியக் குழு உறுப்பினர் (8 ஆவது வார்டு) மற்றும் சித்தலவாய் ஊராட்சி தலைவர், கடவூர், அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 15 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
15 உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க 42,605 பேர் வாக்களிக்கும் தகுதி இருந்தும் கடந்த 9 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 16643 ஆண்கள், 18497 பெண்கள், இதர 1 என மொத்தம் 35141 பேர் வாக்களித்துள்ளனர். இதன் சதவீதம், 81.48 சதவீதம் ஆண், 83.20 சதவீதம் பெண், இதர 25 சதவீதம் என மொத்தம் 82.36 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களான தாந்தோன்றிமலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. மாவட்ட கவுன்சிலர் வாக்குகள் தாந்தோன்றி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் அறையில் போடப்பட்டுள்ள மேசையில் வரிசை எண் பட்டியல் மாற்றி வைத்துள்ளதால் திமுக அதிமுகவினரிடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. ஒரே வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவிடம் ஒரு வாக்கு எண் வரிசை பட்டியலும், அதிமுகவிடம் வேறு வரிசை பட்டியலும் அதிகாரிகள் கொடுத்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு கட்சியினரும் தங்களிடம் உள்ள பட்டியல் படிவாக்கு எண்ண வேண்டும் என கோரி வாக்கு எண்ணும் மைய அதிகாரி மந்தராச்சலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சுமார் 1 மணி நேரம் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.
*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
பின்னர், வாக்கு எண்ணும் போது வாக்கு சீட்டில் இரண்டு பக்கமும் சீல் இருந்துள்ளது, இதனால், திமுக அதிமுக இரு தரப்பினரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து திமுக - அதிமுகவினர் ஒருவருக்கு ஒருவர் கூச்சல் போட்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது.