கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட நிலையில், மாநிலத்தில் கிட்டத்தட்ட 9.17 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் தேதிகள் அறிவிப்பு


224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்காக தேசிய தலைநகர் டெல்லி, விக்யான் பவனில் உள்ள பிளீனரி ஹாலில் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அதில், கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதேசமயம் மே 13-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி ஏப்ரல் 13 என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 20 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 21ம் தேதியும், வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24ம் தேதி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






பசவராஜ் பொம்மை ஆட்சி


மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான எல்லா விஷயங்களையும் செய்து வருகின்றனர். கன்னடர்கள் பிரச்சினை தொடங்கி, லிங்காயத் மற்றும் வொக்கலிகா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்தி முஸ்லீம் சமூகத்திற்கான மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது வரை பல அதிரடி நடவடிக்கைகளை கர்நாடக பாஜக அரசாங்கம் சமீபத்தில் செய்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: UPI Transaction : வருகிறது ஆப்பு: திணறவைக்கும் டிஜிட்டல் இந்தியா: ஏப்ரல் 1 முதல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்...


வாக்குச்சாவடிகளில் பெண்கள்


கர்நாடக சட்டப்பேரவையின் 224 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் வகையிலும், முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் வகையிலும், கர்நாடகாவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 1,300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பெண்களே பிரத்யேகமாக செயல்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சோதனைச் சாவடிகள், சிறப்பு நெடுஞ்சாலைகள் மற்றும் குடோன்கள் அடையாளம் காணப்பட்டு வரைபடமாக்கப்பட்டுள்ளது. 






முதல் முறை வாக்காளர்கள்


இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி கர்நாடகாவில் 5.05 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 2.50 கோடி பெண் வாக்காளர்களும், கிட்டத்தட்ட அதே அளவு ஆண்கள் வாக்காளர்களும், 4,502 இதர வாக்காளர்களும் அடங்குவர். அதில் 9.17 லட்சம் வாக்காளர்கள் முதல்முறை வாக்காளர்கள் ஆவார்கள். இது தவிர 17 வயதைக் கடந்துள்ள 1.25 லட்சம் பேர் இதுவரை முன்கூட்டியே வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்திருப்பதாகவும், அதில் 41,000 பேர் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் 18 வயதை எட்டுவதால் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வந்துவிடுவதால் அந்த வேலையும் நடந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.