கர்நாடகாவில் தனது தந்தை சித்தராமையா தான் முதலமைச்சர் என, அவரது மகன் யதேந்திர  சித்தராமையா தெரிவித்துள்ளார்.


சித்தராமையா மகன் உறுதி:


மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய யதேந்திர சித்தராமையா “பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற எதை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். கர்நாடக மாநிலமே விரும்புவதை போன்று, எனது தந்தை சித்தராமையா முதலமைச்சராவார். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெறும். எனது தந்தை வருணா தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஒரு மகனாக எனது தந்தையை முதலமைச்சராக பார்க்க விரும்புகிறேன்.   அதேநேரம் கர்நாடக குடிமகனாக சொல்கிறேன், அவரது தலைமையிலான அரசு கடந்த முறை சிறப்பாக செயல்பட்டது. இந்த முறை அப்படியே செயல்படும். பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மற்றும் சட்டவிதிமீறல்கள் சரி செய்யப்படும்” என உறுதியளித்தார்.



9 மணி நிலவரம்:


9 மணி நிலவரப்படி பாஜகவை காட்டிலும் காங்கிரஸ் கட்சி 6 சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறது. இதையடுத்து, வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக பெங்களூருவிற்கு வரவேண்டும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதேநேரம், பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கர்நாடகா தேர்தல் முடிவுகள்:


கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக 43 சதவிகித வாக்குகள் பெற்று காங்கிரஸ் சுமார் 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் நேரடியாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வரும் சூழலில், காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட இருப்பது யார் என்பது தொடர்பான கேள்வியும் எழுந்துள்ளது. 


சித்தராமையா Vs சிவக்குமார்:


கடுமையான களப்பணி மூலம் பாஜகவை வீழ்த்தி, தென்னிந்தியாவில் பாஜகவின் ஆட்சியே இல்லை என்ற சூழலை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் உடனான மோதல் முடிவுற்ற நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவகாரத்தில் உட்கட்சியிலே கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தேர்தலில் வெற்றிபெற அரும்பாடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 


இதனிடையே, வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேநேரம், பாஜக அலுவலகங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.